முன்னோடி தலைமுறைத் திட்ட நிதியில் $785மி. பற்றாக்குறை: அரசாங்கம் உதவும்
முன்னோடித் தலைமுறைக்கான பல உதவித் திட்டங்களுக்கான நிதியில் $785 மில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மதிப்பீட்டுக் குழு தெரிவித்துள்ளது.
அரசாங்க செலவினங்களை ஆய்வு செய்யும் அக்குழு குறித்து நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையில் நிதி அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) விளக்கமளித்தது.
முன்னோடிகளுக்காக அறிவித்த திட்டங்களை நிறைவேற்றும் விதமாக தேவைப்படும்போது அரசாங்கம் அந்த நிதிகளை நிரப்பும் என நிதி அமைச்சு குறிப்பிட்டது.
ஆனால், ஆண்டுதோறும் அந்த உதவி நிதிகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டால் அவற்றை நிலைப்படுத்த தொடர்ந்து நிதி நிரப்பும் திட்டம் இல்லை எனவும் அமைச்சு தெளிவுபடுத்தியது.
முன்னோடி தலைமுறைத் திட்டத்தோடு, மெர்டேக்கா தலைமுறை திட்டம், மஜுலா தொகுப்புத் திட்டம் ஆகிய மூன்று திட்டங்களைச் செயல்படுத்த போதுமான நிதி அரசாங்கத்திடம் உள்ளதா என மதிப்பீட்டுக் குழு எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது நிதி அமைச்சு இவ்வாறு கூறியது.
1973 அல்லது அதற்கும் முன்பாக பிறந்த மூத்த தலைமுறையைச் சேர்ந்த சிங்கப்பூரர்களுக்கு ஆதரவாக இந்த மூன்று திட்டங்களும் படிப்படியாக உதவிகள் வழங்கும் வகையில் தொடங்கப்பட்டன. அவ்வகையில் பல மானியங்கள் உட்பட அவர்களின் மருத்துவப் பராமரிப்புக்கும் பணி ஓய்வு நிதிக்கும் நிரப்புத் தொகைகள் வழங்கப்படுகின்றன.
உயர்ந்துவரும் மருத்துவச் செலவினங்களைக் கருத்தில்கொண்டு, அதற்குத் தேவையான பாதுகாப்பை வழங்க அந்த மூன்று உதவித் திட்டங்களுக்கும் போதிய நிதி அரசாங்கத்திடம் உள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ள அதனைத் தொடர்ந்து கண்காணிக்கும்படி அரசாங்கத்தை மதிப்பீட்டுக் குழு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது.
முன்னோடி தலைமுறையினருக்கானத் திட்டத்துக்கு மேலும் நிதி நிரப்பு செய்யப்படவேண்டும் எனவும் மதிப்பீட்டுக்குழு பரிந்துரைத்திருந்தது. ஏனெனில் அதன் தேவைகள் இருப்பை மிஞ்சி விட்டது என்று குழு கண்டறிந்துள்ளது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
ஆண்டுதோறும் வரையப்படும் வரவு செலவுத் திட்டத்தில் உதவித் திட்டங்களுக்கான நிரப்புத் தொகைகளும் ஓர் அங்கம் என்று குழு குறிப்பிட்டது.
முன்னோடித் தலைமுறை உதவித் திட்டத்தில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டதை அறிந்ததும் நிதி அமைச்சு அந்த திட்டத்தைத் தொடர்வது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று மதிப்பீட்டுக் குழு கேட்டுக்கொண்டது.
அந்தக் குறிப்பிட்ட திட்டம் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக பிறந்தோருக்கு நிதி உதவி அளிக்க தொடங்கப்பட்டது.
அது 2014ஆம் ஆண்டில் $8 பில்லியன் நிதியோடு ஆரம்பித்தபோது அதற்கு $5.17 பில்லியன் மீதத் தொகை இருந்தது. 2025ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, அதன் செலவு $5.96 பில்லியன் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அந்த விவரங்கள் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.