📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 30, 2026 07:31 PM

முதலமைச்சர் விஜய் கர்நாடகா பயணம்? சூடுபிடித்த அரசியல் களமும் டெல்டா விவசாயிகளின் அச்சமும்

முதலமைச்சர் விஜய் கர்நாடகா பயணம்? சூடுபிடித்த அரசியல் களமும் டெல்டா விவசாயிகளின் அச்சமும்

முதலமைச்சர் விஜய் கர்நாடகா பயணம்? சூடுபிடித்த அரசியல் களமும் டெல்டா விவசாயிகளின் அச்சமும்

திமுக சார்பில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த போராட்டம், தமிழக அரசியல் களத்தில் தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Published : July 30, 2026 at 7:01 PM IST

-BY எஸ். சையத் இப்ராஹிம்

காவிரி நீர்ப்பகிர்வு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்லவிருப்பதாக வெளியான தகவல், தமிழக அரசியல் களத்திலும் விவசாயிகள் அமைப்புகளின் மத்தியிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை நேரில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக வெளியான தகவலுக்கு தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான திமுக மற்றும் பல்வேறு டெல்டா விவசாயிகள் சங்கங்கள் மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.

சட்டப்பூர்வ உரிமைகள் பலவீனமடையும் என எச்சரிக்கை

முதலமைச்சர் விஜய்யின் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் முதன்மையான வாதம், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகிய சட்டப்பூர்வ அமைப்புகளை தாண்டி இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு செல்வது தமிழகத்தின் பல ஆண்டுகால சட்டப் போராட்டத்தை வீணடித்துவிடும் என்பதாகும்.

கடந்த 2018-ம் ஆண்டு காவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கான தண்ணீரின் அளவை சட்டப்பூர்வமாக உறுதி செய்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவுபடி கர்நாடக அரசு தண்ணீர் தரவில்லை. இந்த நிலையில் தமிழக முதல்வர் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தைக்கு சென்றால், அது தமிழகம் இதுவரை பெற்றுள்ள சட்டப்பூர்வப் பாதுகாப்பைத் தளர்த்திவிடும் என்று எதிர்க்கட்சிகள் எச்சரிக்கின்றன.

மேகதாது விவகாரத்தில் பின்னடைவு ஏற்படும் என அச்சம்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டத் துடிக்கும் கர்நாடகாவின் திட்டத்திற்கு தமிழக அரசு எந்த வகையிலும் இடமளிக்கக் கூடாது. பேச்சுவார்த்தை என்ற பெயரில் அங்கு செல்வது, மேகதாது அணைக்கான தீர்ப்பாயக் கோரிக்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் என திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் விஜய் தனது கர்நாடக பயணத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தை தமிழகத்திற்கு எவ்விதப் பலனையும் தராது என்றும், மாநிலத்தின் நதிநீர் உரிமைகளைப் பலவீனப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வதே கர்நாடகாவின் மேகதாது திட்டத்திற்கு மறைமுகமாக அங்கீகாரம் அளிப்பது போல் ஆகிவிடும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே வருகிறார்.

கர்நாடகா அரசியல் நாடகம் நடத்த முயற்சி என குற்றச்சாட்டு

கர்நாடக அரசு இந்த சந்திப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள திட்டமிடுவதாக விவசாயிகள் சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.

கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், தமிழக முதல்வர் விஜய்யை கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளை நேரில் பார்வையிடுமாறு வான்வழிப் பயணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தங்கள் மாநில அணைகளில் தண்ணீர் இல்லை, வறட்சி நிலவுகிறது என்ற பிம்பத்தை காட்டி, தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீரின் அளவைக் குறைப்பதற்கோ அல்லது தட்டிக்கழிப்பதற்கோ கர்நாடகா முயற்சிக்கும் என்று தமிழக விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

மேலும், இத்தகைய மிக முக்கியமான மாநிலப் பிரச்சனை குறித்து முடிவெடுப்பதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசு விவசாயிகள் சங்கங்களையோ அல்லது அனைத்துக் கட்சிக் கூட்டத்தையோ கூட்டி எந்தவொரு ஆலோசனையும் நடத்தவில்லை. இந்த தன்னிச்சையான போக்கு தமிழ்நாட்டிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என்றும் எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

டெல்டா விவசாயிகள் அஞ்சுவது ஏன்?

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிகவும் கவலைக்கிடமாக உள்ள சூழலில், குறுவைச் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் இன்றி டெல்டா மாவட்ட விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

பேச்சுவார்த்தை, குழுக்கள் அமைத்தல் என்ற பெயரில் கர்நாடகா ஒருவேளை காலம் கடத்தினால், தற்போதைய குறுவை மற்றும் அடுத்து வரவிருக்கும் சம்பா பயிர்கள் கருகி பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என டெல்டா விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு, கர்நாடகாவை சார்ந்து இருப்பதை விட்டுவிட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி உரிய தண்ணீரை (27.5 டிஎம்சி நிலுவை) உடனடியாக பெற்றுத் தர மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.

போராட்டத்தை அறிவித்த திமுக

முதலமைச்சர் விஜய்யின் கர்நாடக பயணத்தை கண்டித்து, திமுக சார்பில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் மிகப் பெரிய போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த போராட்டம், தமிழக அரசியல் களத்தில் தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இந்த சந்திப்பு தமிழகத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிக் காலத்தில் இத்தகைய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், முதலமைச்சர் விஜய்யின் கர்நாடக பயணம் குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

வேளாண் துறை அமைச்சர் ஆர். வினோத் இந்த பயணம் குறித்த தேதியை முதன்முறையாக தெரிவித்த நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜ்மோகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதலமைச்சரின் கர்நாடக பயணம் குறித்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து மட்டுமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். வேறு எந்த தகவலையும் நம்ப வேண்டாம்" என கூறியிருக்கிறார்.

இருந்தாலும், தமிழக முதலமைச்சர் கர்நாடகாவுக்கு சென்றாலும், மேகதாது அணைத் திட்டத்திற்கு எந்த வடிவிலும் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்பதே விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலமாக மட்டுமே சட்டப்படியான தண்ணீரைப் பெற அரசு முழு வீச்சில் செயல்பட வேண்டும். தமிழகத்தின் வாழ்வாதார உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் ஒட்டுமொத்தத் தமிழகமும் உறுதியாக உள்ளது.

இதனிடையே, தவெக தலைமை இன்று விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், "மேகதாது விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த பிரச்சினையிலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட, தவெக அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது" என்று தெளிவுபடுத்தியுள்ளது.