முதல்வர் குறித்து திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் அவதூறு: விசாரணை நடத்த உரிமை மீறல் குழுவுக்கு பேரவைத் தலைவர் உத்தரவு
சென்னை: முதல்வர் விஜய் குறித்து திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் அவதூறாகப் பேசிய விவகாரத்தில் விசாரணை நடத்த உரிமை மீறல் குழுவுக்கு பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் உத்தரவிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீது நேற்று நடந்த விவாதத்தில் உறுப்பினர்கள் பேசிய தாவது:
விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன்: அரசின் பட்ஜெட் வெறும் கானல் நீராக உள்ளது. பாரதிதாசன் பற்றி அமைச்சர் பேசியது மகிழ்ச்சி. அதனால்தான் சிறைக்கதவுகளுக்கு பின்னால் மீண்டும் இந்த அவையில் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது.
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்: உறுப்பினர் சிறைக்கதவுக்கு பின்னால் வந்ததாகத் தெரிவித்தார். வழக்கு நிலுவையில் உள்ளதால் அதனைப் பற்றி பேசவேண்டாம். முதல்வர் குறித்து உறுப்பினர் பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரவை தலைவர் பிரபாகர்: முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியது குறித்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடிதம் வழங்கியுள்ளார். பொதுவெளியில் அவர் பேசியபேச்சு அனைவருக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஆபாசமான பேச்சு.
வன்முறைப் பேச்சு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று, அதனை அவரவர் கட்சி சார்ந்த தலைவர்கள் முதலில் கண்டிக்க வேண்டும். எனவே, உறுப்பினர் பேச்சுக்கு விசாரணை செய்ய அவை உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்கிறேன்.
எ.வ.வேலு (திமுக): ஏற்கெனவே, உறுப்பினர் மார்கண்டேயன் சிறைக்கு சென்றுவிட்டார். அவையில் பேசுவதை வைத்துதான் உரிமை மீறலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஒரே பிரச்சினைக்கு இரண்டு இடங்களில் விசாரித்து தண்டனை வழங்குவது இல்லாத ஒன்று. எனவே அதனை பரிசீலனை செய்ய வேண்டும்பேரவை
தலைவர் பிரபாகர்: உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைத்து விசாரிப்போம். அதன்பிறகு அடுத்த நடவடிக்கை மேற்கொள்வோம்.
அருள்கூர்ந்து மறந்துவிட வேண்டும்
மார்கண்டேயன்: முதல்வர் குறித்து பேசியது தவறு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினர்.