📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 08, 2026 12:04 PM

முதல்வர் கூப்பாடு போடுவது அநாகரிக அரசியல்: நயினார் நாகேந்திரன்

முதல்வர் கூப்பாடு போடுவது அநாகரிக அரசியல்: நயினார் நாகேந்திரன்

சென்னை: ‛மக்கள் மன்றத்தில், மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை மட்டும் பேசுங்கள்; தந்தை, மகன் கதையெல்லாம் தமிழக மக்களுக்கு தேவையில்லை' என பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டசபை என்பது சினிமா ஸ்டுடியோ அல்ல. முதல்வர் விஜயின் அடுக்கடுக்கான வசனங்களை கேட்டு ஆர்ப்பரிப்பதற்கு, தமிழக மக்கள் ஒன்றும் உங்கள் கட்சியின் ஆச்சரியக்குறிகள் அல்ல. த.வெ.க.,வுக்கு இரண்டு அமைச்சர்களை வழங்கிய கோவை மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 கொலைகள் நடந்துள்ளன.

சென்னை மாநகரில் நேற்று முன்தினம் ஒரே நாளில், இரண்டு படுகொலைகள் நடந்துள்ளன. நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, ஆறு காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்களில் சிலர், மக்களை தரக்குறைவாக நடத்துகின்றனர். முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையின் மீது, மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

அப்படி இருக்கும்போது, சட்டசபையில் காவல் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில், இந்த அவலங்களுக்கு எல்லாம், முதல்வர் முறையாக பதில் அளித்திருக்க வேண்டும்.

மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதம் அளித்திருக்க வேண்டும். ஆனால், முதல்வரோ, 'எனக்கும் சட்டம் - ஒழுங்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை' என்ற ரீதியில், அதிரடி திரைப்படத்தில் அடுக்கடுக்கான வசனங்கள் பேசுவது போல, கத்தி கூப்பாடு போடுவது அநாகரிகமான அரசியல்.

எனவே, மக்கள் மன்றத்தில், மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை மட்டும் பேசுங்கள்; தந்தை, மகன் கதையெல்லாம் தமிழக மக்களுக்கு தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.