📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 13, 2026 06:35 PM

முதல்வர் விஜயின் பேச்சைக் கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜயின் பேச்சைக் கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

மக்கள் விசில் பக்கம் சாய்ந்து ஏமாந்துவிட்டனர்- திமுக முன்னாள் எம்எல்ஏ உதயசூரியன் பேச்சு

திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை அழைத்துச் சென்று முதலமைச்சரான நீங்கள், எங்கள் தலைவரை (மு.க.ஸ்டாலின்) பற்றி பேசலாமா? என்று திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Published : September 13, 2026 at 11:36 AM IST

Updated : September 13, 2026 at 12:11 PM IST

கள்ளக்குறிச்சி: செல்போனை பார்த்து மக்கள் விசில் பக்கம் சாய்ந்து ஏமாந்துவிட்டதாக திமுக முன்னாள் எம்எல்ஏ உதயசூரியன் விமர்சித்துள்ளார்.

மிசாவில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் பேசி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பேச்சைக் கண்டித்து நேற்று (செப்.12) கள்ளக்குறிச்சியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான உதயசூரியன், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதியின் எம்எல்ஏவுமான வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முன்னாள் எம்எல்ஏ உதயசூரியன், "நானும் ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்துள்ளேன்; சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும்; என்ன பேசக்கூடாது என்று தவெக சர்க்கஸ் பார்ட்டிக்கு தெரியாது. அதற்கு இங்கிருக்கும் தாய்மார்கள் தான் காரணம். தேர்தல் பிரச்சாரத்தில் தவெக ஆறு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று சொன்னதும் வாயைப் பிளந்தனர்.

மாதம் ரூ. 2,500 மகளிர் உரிமைத் தொகை, கன்னியாகுமரி முதல் சென்னை வரை பேருந்தில் இலவசமாக போகலாம் என்று சொன்னதும் இரண்டு நாட்களில் தேர்தல் களம் மாறியது. நண்பாஸ், குட்டீஸ் என்று கூறியதை செல்போனில் பார்த்து வாக்களித்தனர். நாங்கள் முன்பு நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு ஒரு போட்டோகிராஃபரை அழைத்து வந்து எடுப்பதே பெரிய விஷயமாக இருந்தது. மூலை மூலைக்கு செல்போனை பார்த்து மக்கள் விசில் பக்கம் சாய்ந்து ஏமாந்துவிட்டனர்.

நான் சொல்வதைத் திரும்ப உரக்கச் சொல்லுங்கள். லண்டனுக்கு சென்றுள்ள விஜய்க்கு காது கேட்க வேண்டும். முதலமைச்சர் இரண்டு பேர் உடன் லண்டன் சென்றுள்ளார்" எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய சங்கராபுரம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், "எங்கள் தலைவர் சிறையில் இருந்தது உண்மை தான். மக்கள் செலுத்திய வாக்குகளால் நீங்கள் முதலமைச்சராகியுள்ளீர்கள். எங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளை அழைத்துச் சென்று முதலமைச்சரான நீங்கள், எங்கள் தலைவரை (மு.க.ஸ்டாலின்) பற்றி பேசலாமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.