முட்டுக்காடு கலைஞர் பன்னாட்டு அரங்கத்தை புதிய சட்டசபையாக மாற்ற அரசு திட்டம்?
சென்னை: முட்டுக்காட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் பன்னாட்டு அரங்கத்தை, புதிய சட்டசபை வளாகமாக மாற்ற, அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலைமை செயலகத்தில் உள்ள ஜார்ஜ் கோட்டையான பாரம்பரிய கட்டடத்தில், தமிழக சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. இங்கு கடுமையான இடநெருக்கடி நிலவுகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் வரும் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை உள்ளது.
இதற்காக, 2011ம் ஆண்டுக்கு முந்தைய தி.மு.க., ஆட்சியில், அண்ணா சாலையில், புதிய தலைமை செயலக கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், 2011ம் ஆண்டு அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், அந்த கட்டடம், அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
கொரோனா காலத்தில், வாலாஜா சாலையில் உள்ள புதிய கலைவாணர் அரங்க கட்டடத்தில், தற்காலிக சட்டசபை இயங்கி வந்தது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், கொரோனா தாக்கம் குறைந்ததும், மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு சட்டசபை மாறியது.
த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பின், தலைமை செயலக வளாகத்தில் நெருக்கடி அதிகரித்துள்ளது.
தி.மு.க., ஆட்சியில், கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில், 525 கோடி ரூபாய் மதிப்பில், கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இங்கு, 5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டு கூடம், 10,000 பேர் பார்வையிடும் வசதி உடைய கண்காட்சி கூட்ட அரங்கம் உள்ளிட்டவை அமைய உள்ளன.
இந்த கலைஞர் பன்னாட்டு அரங்கத்தின் கட்டுமான பணிகள், நடப்பாண்டு டிசம்பரில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் விஜய் உள்ளிட்டோர் வந்து செல்ல வசதியாக, கலைஞர் பன்னாட்டு அரங்கத்தை சட்டசபை வளாகமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த பன்னாட்டு அரங்க கட்டுமான பணிகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி சென்றுள்ளார்.
முதல்வர் விஜய் எடுக்கும் முடிவை பொறுத்து, இந்த கட்டடத்தில் சட்டசபை கூட்டம் மட்டும் நடத்தப்படலாம். அடுத்தாண்டு ஜனவரியில் கவர்னர் உரை இங்கு நிகழ்த்தப்படலாம் என, பொதுப்பணித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.