📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 08, 2026 05:04 PM

நாடாளுமன்ற உறுப்பினர் படித்தொகை $18,500ஆக உயர்வு

நாடாளுமன்ற உறுப்பினர் படித்தொகை $18,500ஆக உயர்வு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்தரப் படித்தொகை $13,750லிருந்து $18,500ஆக உயர்த்தப்பட உள்ளது.

அரசியல் பதவி வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சம்பளக் கட்டமைப்பு தொடர்பில் தன்னிச்சையான மறுஆய்வுக் குழு முன்மொழிந்த பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

அதன்படி, முதற்கட்டமாக வரும் அக்டோபர் 15ஆம் தேதியிலிருந்து அரசியல் பதவி வகிப்போர் ஒருமுறை மட்டும் 9 விழுக்காடுவரை சம்பள உயர்வு பெறுவர்.

அதன் தொடர்பில், நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங், சம்பளக் கட்டமைப்பு ஒன்றும் புதிதன்று எனக் குறிப்பிட்டார்.

தொடக்கநிலை (எம்ஆர்4) அமைச்சரின் ஆண்டுச் சம்பளத்தை $1.8 மில்லியனாக உயர்த்த வேண்டும் என்ற மறுஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.

குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டாலும் அரசியல் பதவி வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சம்பளத்தை உடனடியாக ஒரே தவணையில் அரசாங்கம் உயர்த்தாது என்று திரு வோங் கூறினார்.

இந்தத் ஆட்சித் தவணையின் இறுதிக்குள் எம்ஆர்4 நிலை அமைச்சர்களின் ஆண்டுச் சம்பளம் கிட்டத்தட்ட $1.35 மில்லியனாக உயரும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இப்போதைய 16 அமைச்சர்களில் 10 பேர் எம்ஆர்4 நிலையில் உள்ளனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சம்பளக் கட்டமைப்பிலுள்ள அமைச்சர்நிலைகள் நான்கிலிருந்து மூன்றாகக் குறைக்கப்படுகின்றன. அதாவது, எம்ஆர்2, எம்ஆர்3 அமைச்சர்நிலைகள் ஒன்றிணைக்கப்படுகின்றன.

அமைச்சர்களின் சம்பளமானது, அவர்களது அமைச்சர்நிலைக்கான வருடாந்தரக் குறியீட்டுச் சம்பளத்தில் 75% முதல் 125% வரை இருக்கும்.

மேயர், மூத்த நாடாளுமன்றச் செயலாளர், நாடாளுமன்றச் செயலாளர் ஆகியோரின் நிலைகளும் ஒன்றிணைக்கப்படும். ஒன்றிணைக்கப்பட்ட நிலைக்கான சம்பளத்தில் 70% முதல் 130 % வரையிலான சம்பளத்தை அவர்கள் பெறுவர்.

அரசியல் பதவி வகிப்போர்க்கான சம்பளத்தில் 65 விழுக்காடு நிலையானது என்றும் எஞ்சிய 35 விழுக்காடு மாறக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டது. மாறக்கூடிய விகிதமானது ஒருவரின் தனிப்பட்ட செயல்பாடு, தேசிய ஊக்கத்தொகை போன்றவற்றின் அடிப்படையில் அமையும்.

‘ஒருவர்க்கு ஒரு சம்பளம்’

ஒருவர் எத்தனை பதவி வகித்தாலும் ‘ஒருவருக்கு ஒரு சம்பளம்’ எனும் கொள்கை பின்பற்றப்படும்.

இந்தச் சம்பள மாற்றங்களால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு $11.6 மில்லியன் வரை கூடுதலாகச் செலவாகலாம் என்று பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் சேவையாற்றக்கூடிய முதல்தரமான குழு ஒன்றைக் கட்டமைப்பதற்குச் சிங்கப்பூருக்குச் சிறந்த வாய்ப்பை வழங்குவதே இந்த மறுஆய்வின் அடிப்படை நோக்கம் என்று திரு சான் குறிப்பிட்டார்.

அரசியல் பதவி வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்க்கான சம்பள மறுஆய்வுக் குழு கடந்த ஆண்டு டிசம்பரில் அமைக்கப்பட்டது. அந்த எண்மர் குழுவிற்குச் சிங்கப்பூர் எல்என்ஜி முனையத்தின் தலைவர் கான் சியாவ் கீ தலைமை வகித்தார். மற்ற எழுவரும் தனியார் துறையையும் மக்கள் துறையையும் சேர்ந்தவர்கள். அப்பணியில் உலகின் முன்னணி மனிதவள நிறுவனமான மெர்சரின் துணையும் நாடப்பட்டது.