📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 15, 2026 11:03 AM

நாட்டின் 80வது சுதந்திர தின விழா அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

நாட்டின் 80வது சுதந்திர தின விழா அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

நாட்டின் 80வது சுதந்திர தின விழா அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மாணிக்கம் தாகூர் (தமிழக காங்கிரஸ் தலைவர்): மதவெறி சக்திகளை மாய்த்திடவும், மாநில உரிமைகள் பறிப்பதை முறியடிக்கவும், மதநல்லிணக்கத்தை காத்திடவும் சுதந்திர திருநாளில் சூளுரையேற்போம்.

பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி போன்ற விழுமியங்களை கொண்ட அரசியல் சட்டத்தை பாதுகாக்க விடுதலை நாளில் உறுதியேற்போம். விடுதலைப் போராட்ட தியாகிகளின் கனவுகளை நனவாக்கவும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற சமத்துவ சமூகத்தை உருவாக்கிடவும் இந்நாளில் உறுதியேற்போம்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக தலைவர்): விடுதலை என்பது வெறும் அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதைக் குறிக்கும் சொல் அல்ல. ஒவ்வொரு குடிமகனும் கண்ணியத்துடனும் சம உரிமையுடனும் வாழ்வதற்கான உரிமையே உண்மையான சுதந்திரம். மதத்தின் பெயரால் மக்களிடையே வெறுப்பையும் பிளவையும் ஏற்படுத்தும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்.

நெல்லை முபாரக்(எஸ்டிபிஐ கட்சி தலைவர்): சுதந்திர போராட்ட வீரர்களின்தன்னலமற்ற தியாகங்களை இந்த சுதந்திர தினத்தில் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுவோம். ஆயிரமாயிரம் தியாகிகளின் குருதியால் வென்றெடுக்கப்பட்ட இந்த சுதந்திரத்தையும், தேசத்தின் ஆன்மாவான அரசியலமைப்பு சட்டத்தையும், அதன் பன்முகத்தன்மையையும் பாதுகாத்திட நாம் அனைவரும் ஒன்றுபட்டு உறுதியேற்போம்.

டி.டி.வி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): நமது முன்னோர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை பேணிக் காத்திடும் இந்நாளில், சாதி, மதம், மொழி மற்றும் இன வேறுபாடுகளை களைந்து, நாம் அனைவரும் ‘இந்தியர்’ என்ற ஒற்றுமை உணர்வுடன் ஒன்றிணைந்து, உலக அரங்கில் நமது இந்தியத் திருநாட்டை முன்னணி நாடாக கொண்டு செல்ல உறுதியேற்போம்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): தியாகிகளின் கடின உழைப்பால் மற்றும் லட்சக்கணக்கான மக்களின் தொடர் திரள் போராட்டங்களால், தியாகங்களால் கிடைத்த இந்தச் சுதந்திரத்தை நாம் பெருமையுடன் நினைவுகூர்வோம். இதேபோல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* வளமான இந்தியாவை உருவாக்குவோம் - ஆளுநர் அர்லேகர் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற இலக்கை அடைய வலிமையான, வளமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் தமிழகத்துக்கு முக்கிய பங்கு உள்ளது.

தமிழகத்தின் வளமான பாரம்பரியம், அறிவு, தொழில் முனைவு மற்றும் மனிதவளம் இந்த தேசியப் பணிக்கு பெரும் பங்களிப்பை வழங்கும். இளைஞர்கள் தேசக் கட்டமைப்பில் தங்களை அர்ப்பணித்து, வருங்கால தலைமுறைக்காக சிறந்த, வலிமையான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க உறுதியுடன் செயல்பட வேண்டும். தேசப்பற்று, ஒற்றுமை மற்றும் சேவை உணர்வு அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்.