📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 09, 2026 12:03 PM

நேபாள வெள்ளத்தின் துயரங்கள்

நேபாள வெள்ளத்தின் துயரங்கள்

நேபாள வெள்ளத்தின் துயரங்கள் - செய்தியாளர் நேரில் கண்ட நெஞ்சை உலுக்கும் காட்சிகள்

வெளிநாடுகளில் பலவிதமான அழிவுகளை தாம் கண்டிருந்தாலும், நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குடன் எதையும் ஒப்பிட முடியாது என்று சம்பவத்தை நேரில் பார்த்த சிவராஜ் சமந்த் கூறினார்.

Published : September 8, 2026 at 10:34 PM IST

நேபாளம்: நேபாளத்தின் திரிசூலி நெடுஞ்சாலையில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரத்துண்டுகளை சேகரித்துக் கொண்டிருக்கிறான் அந்த சிறுவன். 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் அந்த சிறுவனின் பெயர் பினேஷ் தமங். சிறுவனின் தந்தை கடந்த வாரம் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். தந்தையை இழந்த சோகம் முகத்தில் தெரிகிறது. தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்த கையோடு விறகு சேகரிக்க வந்துள்ளான். சிறுவனுக்கு அவனுடைய உறவினர் உதவி செய்து கொண்டிருக்கிறார்.

தந்தையை இழந்த சிறுவன்

திரிசூலி ஆற்றில் வந்த பெருவெள்ளம், மரக்கட்டைகளையும் மரத்துண்டுகளையும் விட்டுச் சென்றுள்ளது. ஆனால், சிறுவனின் தந்தையான பேருந்து ஓட்டுநர் ரமேஷ் தங்கை வெள்ளம் அடித்துச் சென்று விட்டது. எப்படி நடந்தது என்று சிறுவனிடம் விசாரித்தோம்.

"ஆகஸ்ட் 26ம் தேதி காலை 9.15 மணிக்கு என் தந்தை ரமேஷ் தமங், இங்கிருந்து ராசுவா நகருக்கு பயணிகளுடன் பேருந்தில் புறப்பட்டுச் சென்றார். திரிசூலி ஆற்றின் கரையோரம் உள்ள நெடுஞ்சாலையில் சிறிது தூரம் சென்றதும், திடீரென்று வந்த பெருவெள்ளம் பேருந்தை அடித்துச் சென்று விட்டது" என்று சிறுவன் வினேஷ் தெரிவித்தார்.

ரமேஷ் தமங் உடலும், அவருடன் பயணித்த வேறு சிலரின் உடல்களும் பின்னர் மீட்கப்பட்டன. அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளை நடத்தியதாக கூறிய சிறுவன் மேலும் தொடர்ந்தான்.

"என் தந்தையை இழந்த வேதனையில் இருப்பதால் எனக்கு இங்கு வர விருப்பமில்லை. இருப்பினும், பெருவெள்ளத்திற்குப் பிறகு எங்கள் பகுதியில் சமையல் எரிவாயு, மின்சாரத்திற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால், உணவு சமைப்பதற்காக நாங்கள் விறகு சேகரிக்க வந்துள்ளோம்.

நான் நன்றாக படித்து வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று என் தந்தை அடிக்கடி என்னிடம் கூறுவார்" என்று சொல்லும்போது அவன் கண்கள் குளமாகின.

அந்த சிறுவன் தந்தையை இழந்த துயரத்துடனும், தன் வாழ்க்கைப் பாதை திடீரென மாறிவிட்டதை நினைத்து அழுதான். தந்தையின் கனவுகளை நிறைவேற்ற முயற்சிக்கும், அதே வேளையில், மனமுடைந்து போயிருக்கும் தன் தாயையும், உடன்பிறந்த இருவரையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கூறினான்.

"எங்கள் குடும்பத்தில் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டிய ஒரே நபர் என் தந்தைதான். இனி என் தாய், சகோதரன் மற்றும் சகோதரியை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்பத்திற்கு உதவ ஏதேனும் வேலை தேடத் தொடங்கவிருக்கிறேன்; அதே சமயம் பள்ளிக்குச் செல்வதையும் தொடர முயற்சிப்பேன்" என்று சிறுவன் பினேஷ் தமங் கூறினான்.

அவர்கள் மரத்துண்டுகளைச் சேகரித்துக் கொண்டிருந்த வேளையில், நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை காணவும், இயற்கையின் சீற்றத்தை கண்டு வியக்கவும் உள்ளூரில் இருந்தும், தொலைதூரத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துகொண்டே இருந்தனர்.

திரிசூலி ஆற்றில் அடித்து வரப்பட்ட வண்டல் மண், பாறைகள், மரங்கள், சிதைந்த பொருட்கள் ஆகியவை கலந்த பிரம்மாண்டமான வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவின் சேதத்தை பார்க்க முடிகிறது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலையை காணவில்லை. அதை சீரமைக்க நீண்ட காலமாகும்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள், கால்நடைகள், வாகனங்கள்

நாம் அங்கு சந்தித்த மற்றொரு நபர் சிவராஜ் சமந்த். கெர்குத்தார் புல்வாரி கிராமத்தைச் சேர்ந்த அவர், ஆப்கானிஸ்தானில் வெல்டராகப் பணியாற்றி வந்தார். அங்கு தலிபான்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து அவர் தாயகம் திரும்பினார்.

வெளிநாடுகளில் பலவிதமான அழிவுகளை தாம் கண்டிருந்தாலும், நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குடன் எதையும் ஒப்பிட முடியாது என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "திடீர் வெள்ளப்பெருக்கு பற்றி அறிந்ததும், வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றும் எண்ணத்தில் நான் ஆற்றை நோக்கி ஓடினேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி என்னைப் பெரிதும் அச்சமடையச் செய்தது. மக்கள், கால்நடைகள், வீடுகள், வாகனங்கள், பாறைகள், மரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ராட்சத அலைகளில் சென்று கொண்டிருந்தன. அந்தச் சூழலில் யாராலும் துணிந்து உள்ளே செல்ல முடியாது. நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்த ஒரு நெல் வயலில் ஆறு பெண்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்; அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

ரசுவா மாவட்டத்தில் சுமார் 4,400 மீட்டர் உயரத்தில் ஒரு மலை ஏரி, இந்துக்களின் புனித யாத்திரை தலமாக உள்ளது. கோசைகுண்டா என்று அழைக்கப்படும் அங்கு நடைபெற்ற மதத் திருவிழாவுக்கு நேபாளத்தில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் எத்தனை பேர் வந்தார்கள் என்ற சரியான விவரங்கள் இல்லை. இருப்பினும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கக் கூடும்.

திருவிழாக் காலங்களில் மக்கள் பேருந்துகள் மூலமாகவோ அல்லது பல கிலோ மீட்டர் தூரம் நடைப் பயணமாகவோ அங்கு செல்வார்கள்.

திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது அங்கு எத்தனை யாத்ரீகர்கள் இருந்தனர் ? ஆற்றங்கரையோரம் பயணம் செய்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய எந்தத் தகவலும் இல்லை" என்று அவர் கூறினார்.

உயிர் தப்பிய பள்ளி மாணவர்கள்

பெருவெள்ளத்தை நேரில் பார்த்த மற்றொரு நபர் நிசல் கதிவாடா, சமீபத்தில் 12ஆம் வகுப்பு முடித்த இந்த சிறுவன், திரிசூலி நெடுஞ்சாலை முடிவடையும் இடத்தில் இருந்து சற்று மேலே தனது தந்தை நடத்தும் டீக்கடையில் இருந்தார். நடந்த சம்பவத்தை அவர் விவரிக்கிறார்.

"அப்போது, பள்ளி நேரம் என்பதால், வழக்கம்போல மாணவர்களை ஏற்றி வந்த பல பேருந்துகள் ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்திருந்தன. பேருந்துகளில் இருந்து மாணவர்கள் இறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் கயிறு பாலத்தின் வழியாக ஆற்றைக் கடந்து, திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அந்த நேரம், ஒரு தனியார் பள்ளி மாணவர்களும் அங்கு வந்திருந்தனர்.

மாணவர்கள் பேருந்துகளில் இருந்து இறங்கிக்கொண்டிருந்த இடத்தில் என் தந்தை இருந்தார். அப்போது திடீரென ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதையும், பதற்றமான அலறல் சத்தங்களையும் கேட்ட அவர், உடனடியாக நிலைமையை புரிந்துகொண்டு அந்த மாணவர்களை மேடான பகுதிக்குச் செல்லுமாறு உரக்க கூறினார். மாணவர்கள் மேடான பகுதிக்கு ஓடினர்.

டீக்கடையில் இருந்த எனது தாயாரும், என் மூன்று சகோதரிகளும் கடையை விட்டு வெளியேறி, உயரமான மலைப்பாதையை நோக்கி ஓடினர். திரிசூலி ஆற்றில் இருந்து சுமார் 600 மீட்டர் உயரத்தில் எங்கள் டீக்கடை இருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

சில மணி நேரம் கழித்து நாங்கள் கடைக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, ​பல சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை பார்த்தோம். அவற்றை சிலர் எடுத்துச் சென்றனர். மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஆற்றைக் கடக்க பயன்படுத்தும் கயிறு பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது" என்று நிசல் கதிவாடா தெரிவித்தார்.

நேபாள வெள்ள நிலவரம்

நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் தகவல்படி, இந்த வெள்ளப் பெருக்கால் இதுவரை 1,356 பேர் உயிரிழந்துள்ளனர். 5,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். நேபாள ராணுவமும் காவல்துறையும் சேர்ந்து இதுவரை 13,400 பேரை மீட்டுள்ளனர். ராசுவா, நுவாகோட், தாடிங் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.