நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டில்லி சென்ற நால்வர் குழு!
சென்னை: நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு வர, முதல்வர் விஜய் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில், நால்வர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இப்பணியை மேற்கொள்ள, அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ், வினோத், தென்னரசு ஆகியோர் நேற்று டில்லி சென்றனர்.
நம் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், ஏராளமான தமிழர்கள் சிக்கி தவிக்கின்றனர். இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தை சேர்ந்த, 103 பேர் கைலாஷ் யாத்திரைக்காக, இரண்டு குழுக்களாக நேபாள நாட்டிற்கு சென்றுள்ளனர். முதல் குழுவில், தமிழகத்தை சேர்ந்த 54 பேரும், புதுச்சேரியை சேர்ந்த மூன்று பேர் என மொத்தம் 57 பேரும், இரண்டாவது குழுவில், தமிழகத்தை சேர்ந்த 49 நபர்களும் இடம் பெற்றிருந்தனர்.
நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, தமிழர்கள் உட்பட பலர் காணாமல் போயுள்ளனர். அங்கு சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவும் வகையிலும், தமிழகத்தில் உள்ள அவர்களது உறவினர்களை தொடர்பு கொள்ளவும் ஏதுவாக, அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டன.
இந்த பேரிடரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க, மத்திய வெளியுறவுத் துறை, நேபாள நாட்டில் உள்ள இந்திய துாதகரகம், டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உயர் அலுவலர்கள் மற்றும் பயண முகவர் நிறுவனங்களின் உதவியுடன், துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக, முதல்வர் விஜய் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில், டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உள்ளுறை கமிஷனர் ஆஷிஷ்குமார், தலைமையிலான குழுவினர், நேபாளம் சென்று மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மீட்கப்பட்டுள்ள 20 தமிழர்களை, உடனடியாக தமிழகம் அழைத்து வர உரிய ஏற்பாடுகளை செய்யவும், தொடர்புகொள்ள இயலாதவர்களின் நிலையை கண்டறிந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும், இந்த குழு நடவடிக்கை எடுக்கும்.
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத், அயலக தமிழர் நலத் துறை இயக்குனர் சதீஷ் ஆகியோர், டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முகாமிட்டு மீட்பு பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிட உள்ளனர்.
நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள், உளவியல் ஆலோசனைகளை மருத்துவ குழுவினர் வாயிலாக வழங்கவும், அவர்களை பத்திரமாக தமிழகத்திற்கு அழைத்து வரவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அவர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் அனைவரையும் மீட்டு கொண்டு வரும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது அவர் கூறியதாவது: நேபாளம், திபெத் எல்லையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஒரு நொடியில், வாகனங்கள் செல்லும் 35 பாலங்களும், 45 தொங்கு பாலங்களும் அடித்து செல்லப்பட்டு உள்ளன. அங்கு 40 கி.மீ., சாலைகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன.
தமிழகம், புதுச்சேரியில் இருந்து பல குழுக்களாக, 103 தமிழர்கள் அங்கு சென்றுள்ளனர். இதில், சென்னை, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, கடலுார் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், 20 பேர் அங்குள்ள ஆயுதப்படை போலீசாரிடம் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை மாற்று வழியில் தரை வழியாக மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் டில்லியில், அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. அதில், 937 அழைப்புகள் பெறப்பட்டு உள்ளன. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அனைவரையும் மீட்டு கொண்டு வரும் பணிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், நேபாளத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து, அமைச்சர் ராஜ்மோகன் எழுந்து விளக்கம் அளிக்க முயன்றார். அதற்கு, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - இந்திய கம்யூ., - மார்க்சிஸ்ட் கம்யூ., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. முதலில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதித்து விட்டு, பிறகு அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று கோஷம் போட்டனர். இதனால், சபையில் 10 நிமிடங்களுக்கு மேல் பரபரப்பு நிலவியது.அப்போது சபாநாயகர் பிரபாகர், ''கரூர் சம்பவம் நடந்தபோது, இதே சபையில், அப்போதைய முதல்வர், 'நான் பேசிய பின் கேள்வி கேளுங்கள்' என்று கூறினார். அப்படிப்பட்ட மரபு சபையில் பின்பற்றப்பட்டுள்ளது,'' என்றார். அதன்பிறகும், சபாநாயகரின் முடிவை ஏற்காமல், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் எழுப்பினர். அப்போது எழுந்த அமைச்சர் செங்கோட்டையன், ''சபாநாயகர் தன் முடிவை பரிசீலனை செய்ய வேண்டும்,'' என கேட்டுக்கொண்டார். அதன்பின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை பேச அழைத்து, பிரச்னைக்கு சபாநாயகர் பிரபாகர் முற்றுப்புள்ளி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள 'சூப்பர் யாத்திரா' ஏஜென்சி வாயிலாக, திருக்கயிலாய மானசரோவர் யாத்திரைக்காக, தமிழகத்தை சேர்ந்த 57 பேர், நேபாளம் சென்றனர். இந்த குழுவினர், திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கினர். இவர்களில், ஒரு சுற்றுலா வாகனத்தில் பயணித்த 20 பேர் பத்திரமாக உள்ளனர். மீதம் உள்ள இரண்டு வாகனங்களில் சென்ற 37 பேர் நிலை என்னவென்று தெரியவில்லை. இதேபோல், தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டை, ராதா நகர், ரங்கநாதன் தெருவில் செயல்பட்டு வரும், 'மகாதேவ் கைலாஷ் யாத்ரா' என்ற தனியார் ஆன்மிக சுற்றுலா நிறுவனத்தின் சார்பில், 49 பேர், கடந்த 14ம் தேதி, விமானத்தில் மும்பை, காத்மாண்டு வழியாக, சீனா எல்லையில் உள்ள கைலாஷ் சென்றனர். இந்த 49 பேர், குரோம்பேட்டை, பெரம்பூர், ஆழ்வார்பேட்டை, சிங்கபெருமாள் கோவில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தேனி, நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்களில், 22 ஆண்கள், 27 பெண்கள். யாத்திரையை முடித்து விட்டு, நேபாளம் - சீனா எல்லை பகுதியில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில், 'இமிகிரேஷன்' நடைமுறைகளை மேற்கொண்டிருந்தபோது, திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், அந்த குடியேற்ற அலுவலக கட்டடம், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாகவும், அங்கு இருந்த தமிழக யாத்ரீகர்களின் நிலை குறித்து, இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை என்றும், அவர்களது உறவினர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 57 பேரில், மயிலாடுதுறை செட்டி தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி சிவஞானம் உள்ளிட்ட ஏழு பேரும் அடங்குவர். மயிலாடுதுறையை சேர்ந்த ரத்தினகுமார், பூங்குழலி, புஷ்பலதா ஆகியோர் பாதுகாப்பாக உள்ளது தெரிய வந்துள்ளது. ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி சிவஞானம் உள்ளிட்ட மற்ற நால்வரின் நிலை என்னவென்று தெரியவில்லை என கூறப்படுகிறது.
மத்திய வெளியுறவு துறை செய்திதொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி, 288 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களில், 73 பேர், திரிசூலி நீர்மின் திட்டத்தில் பணிபுரிந்த ஊழியர்கள். காத்மாண்டுவில் உள்ள இந்திய துாதரகம் மூலம் அவர்கள் குறித்த தகவல்களை பெற முயன்று வருகிறோம். அதேபோல் தமிழகத்தில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்ற, 37 மற்றும் 49 பேர் கொண்ட இருவேறு குழுக்களில் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்த, 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் இருந்து புறப்பட்டு சென்ற, 32 பேர், கேரளாவை சேர்ந்த, 33 பேர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து நேபாளம் சென்ற, 61 பேர் கொண்ட குழுவினரை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. திபெத் எல்லையில் தவித்து வரும், 200 இந்தியர்களை பத்திரமாக மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு, தேவையான உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். முதற்கட்டமாக நேற்று முன்தினம், 10 டன் நிவாரணப் பொருட்களை மத்திய அரசு நேபாளத்திற்கு அனுப்பி வைத்தது. இரண்டாம் கட்டமாக நேற்று 37.5 டன் அளவுக்கு நிவாரணப் பொருட்கள், மருந்துகள், கூடாரங்கள் ஆகியவை ராணுவ விமானம் மூலம் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டன.