நீட் தேர்வுக்கு எதிராக தலைநகரில் தொடரும் போராட்டம்
நீட் தேர்வுக்கு எதிராக தலைநகரில் தொடரும் போராட்டம் - கல்லூரி வகுப்புகளை புறக்கணிக்க மாணவர்களுக்கு அழைப்பு
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தங்களின் சீருடையில் 'நேம் பேட்ச்' அணியாமல் இருந்துள்ளனர்.
Published : July 22, 2026 at 10:31 PM IST
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக தலைநகர் சென்னையில் போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் அராஜகமாக கைது செய்ததாகவும், காவல்துறையினரின் தாக்குதலில் காயமடைந்த 5 பேர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சங்கத்தின் மாநில தலைவர் மிருதுளா தெரிவித்தார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.
சென்னை எழும்பூரில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது. இதில் வாலிபர் சங்கத்தன் மாநிலச் செயலாளர் கார்த்திக், பொருளாளர் சந்துரு, மாணவர் சங்க மாநிலத் தலைவர் மிருதுளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணியின் நிறைவாக ஆல்பர்ட் திரையரங்கம் அருகே காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதற்கு அனுமதிக்க மறுத்த காவல்துறையினர் மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சென்னை பல்கலைக் கழக மாணவர் மோகன்தாஸ், சட்டக் கல்லூரி மாணவர் சக்தி, தனியார் கல்லூரி மாணவி அமிர்தா மற்றும் காவலர் ஒருவர் தாக்கியதில் காயமடைந்த வினோத் ஆகிய 4 பேரும் அரசு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் மிருதுளா தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 48 மணி நேர காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று மாணவர் சங்கத்தினர் அறிவித்தனர்.
அதன்படி இன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன் போராட்டம் நடத்த இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் மிருதுளா தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கூடினர். ஆனால் அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் அவர்களை வலுகட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவின்போது மாணவர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிருதுளா கூறினார்.
இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவரான அவர் மேலும் கூறும்போது "காவல்துறை நடத்திய கைது சம்பவத்தின்போது மாணவர்களுக்கு கைகளில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தங்களின் சீருடையில் நேம் பேட்ச் அணியாமல் இருந்துள்ளனர். தங்களின் பெயர் தெரியக்கூடாது என்பதற்காக இதுபோன்று அவர்கள் செய்துள்ளனர்" என்றும் மிருதுளா தெரிவித்தார்.
இந்த நிலையில், "மாணவர் சங்கத்தினர் சொல்வது போல் மாணவர்கள் யாரும் ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை" என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்?: இதனிடையே, தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பின் (TSYF) நிர்வாகிகள், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், "தமிழ்நாடு மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் சார்பாக தமிழ்நாடு முழுவதும் நாளை (ஜூலை 23) கல்லூரிகளில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்த அறைகூவல் விடுக்கிறோம்" என்று கூறினர்.