நீதித் துறையை பணிய வைக்க முடியாது : ராகுல், இண்டி தலைவர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
புதுடில்லி: 'பேரணி நடத்தி நீதித்துறையை மிரட்டவோ, அடிபணிய வைக்கவோ முடியாது. நீதிமன்றத்திற்குள் என்ன பேசுகின்றனர், வெளியே எப்படி பேசுகின்றனர் என்பதை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம். நாங்கள் ஒன்றும் மாட மாளிகையில் வசிக்கவில்லை. வெளி உலகில் நடக்கும் அனைத்தையும் நாங்கள் நன்கு அறிவோம்' என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எஸ்.ஐ.ஆர்., உட்பட பல்வேறு விவகாரங்களில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரின் கருத்துக்களை கேட்பதில்லை என்றும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் சமீபத்தில் செய்தி வெளியானது. இதை தேர்தல் கமிஷன் மறுத்தது.
இந்த விவகாரத்தை கையிலெடுத்த காங்., - திரிணமுல் காங்., - சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணி, ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், எஸ்.ஐ.ஆர்., மூலம் நீக்கப்பட்ட கோடிக்கணக்கான வாக்காளர்களை மீண்டும் சேர்க்கக் கோரியும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த சூழலில், கரப்பான்பூச்சி கட்சியினர் கைது, மெட்ரோ- ரயில் சேவை ரத்து, எஸ்.ஐ.ஆர்., உள்ளிட்ட விவகாரம் குறித்து நேரில் சந்தித்து பேச, கடந்த அக்., 12 அன்று மாலை நேரம் ஒதுக்கும்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு, கார்கே, ராகுல், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் அடங்கிய, 'இண்டி' கூட்டணி கட்சி தலைவர்கள் கடிதம் எழுதினர்.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் நேரம் ஒதுக்காததால் அதிருப்தி அடைந்த கார்கே, ராகுல், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர், எஸ்.ஐ.ஆர்., பணிகளை கண்டித்து, டில்லியில் கடந்த அக்., 12ல் பேரணி நடத்தினர்.
தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்துக்கு வந்த 'இண்டி' கூட்டணி தலைவர்கள், தங்களது வழக்கறிஞர்கள் மூலம், எஸ்.ஐ.ஆர்., பணியில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், அக்., 12ல் நடந்த பேரணியின்போது, உச்ச நீதிமன்ற வளாகம் அருகே பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அப்போது செய்தி சேகரிக்க வந்த கர்ப்பிணி பெண் பத்திரிகையாளர் தள்ளிவிடப்பட்டதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் அருகே அரசியல் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கு, விரிவான வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்சி அமர்வில் நேற்று எஸ்.ஐ.ஆர்., நடவடிக்கைக்கு எதிரான போராட்டம், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கும் கோரிக்கை, பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்களை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள், நீதிமன்ற வளாகம் அருகே போராட்டம் நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் என அனைத்து மனுக்களும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
அப்போது, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில், 'இண்டி' கூட்டணி தலைவர்கள் அக்., 12ல் நடத்திய பேரணி, உச்ச நீதிமன்றத்தை அச்சுறுத்துவது போல இருந்தது என வழக்கறிஞர்கள் சிலர் குற்றஞ்சாட்டி வாதாடினர்.
மேலும், மூத்த வழக்கறிஞரும், பா.ஜ., பிரமுகருமான கவுரவ் பாட்டியா, ''ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வெளியிடும் கருத்துகளும், நடத்தைகளும் கவலை அளிப்பதாக இருக்கின்றன,'' என தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், ''நீதித்துறையை யாரும் மிரட்டவோ, அடிபணிய வைக்கவோ முடியாது. நீதிமன்றத்திற்குள் அவர்கள் என்ன பேசுகின்றனர்; வெளியே இருக்கும்போது எப்படி பேசுகின்றனர் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். வெளி உலகில் என்ன நடக்கிறது என தெரியாத அளவுக்கு நாங்கள் ஒன்றும் மாட மாளிகையில் வசிக்கவில்லை. அனைத்தும் நன்றாக தெரியும்,'' என்றார்.
தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி நடத்தியதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமுல் காங்., - எம்.பி., மஹுவா மொய்த்ரா மற்றும் காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கக் கோரி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதே போல், எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிராக ராகுல் உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 9 தலைவர்கள் தொடர்ந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு, தேர்தல் கமிஷன் மற்றும் தலைமை தேர்தல் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
அதே சமயம், மனுதாரர்களில் ஒருவரின் நடத்தை குறித்து, அடுத்த விசாரணையின்போது கேள்வி கேட்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால், யார் அந்த மனுதாரர் என்பதை நீதிபதிகள் தெளிவாக கூறவில்லை.
தேர்தல் கமிஷனர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஒவைசி தொடர்ந்த மனுவுக்கும் பதில் அளிக்க தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
டில்லியில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கான அங்கீகாரத்தை ரத்து செய்துவிட்டு, வேறு இடத்திற்கு மாற்றியதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் டில்லி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
மூத்த போலீஸ் உயரதிகாரி ஒருவர், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் அளித்த பெண் பத்திரிகையாளருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அக்., 12 பேரணியின்போது உச்ச நீதிமன்ற வளாகத்தில் கர்ப்பிணி பெண் பத்திரிகையாளரை, ராகுல் தள்ளிவிட்டதாக கூறப்படும் புகார் குறித்தும், மனு தாக்கல் செய்தால் பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி விலக கோரி, கடந்த 10ம் தேதி கரப்பான்பூச்சி கட்சி டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது. அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்., 9 இரவு முதல் அக்., 10 இரவு வரை டில்லி மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இணையதள சேவைகளும் முடக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, சேவைகள் முடக்கப்பட்டதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.