நோயல் டாடா உடன் விரிசல்; 'முன்னெச்சரிக்கை'யாக போட்டியிலிருந்து விலகிய N.சந்திரசேகரனின் சாதனைகள்!
நோயல் டாடா உடன் விரிசல்; 'முன்னெச்சரிக்கை'யாக போட்டியிலிருந்து விலகிய N.சந்திரசேகரனின் சாதனைகள்!
நாமக்கலில் பிறந்து டி.சி.எஸ் மூலம் உயர்ந்த சந்திரசேகரன், டாடா குழுமத்தை எப்படி மாற்றினார்? அவரது பதவி விலகலின் பின்னணி என்ன?
ஒன்பது ஆண்டுகள்... இரண்டு பதவிக்காலத்தை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக கழித்துள்ள என்.சந்திரசேகரன் அடுத்த தலைவர் பதவிக்கால போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை.
இது தான் இந்திய பிசினஸ் உலகத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்.
டாடா குழுமத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார் என்கிற தேடல் தொடங்கியுள்ள வேளையில், டாடா குழுமத்தின் வளர்ச்சியில் என்.சந்திரசேகரனின் பங்கு தவிர்த்துவிட முடியாதது ஆகும்.
டாடா குடும்பத்தைச் சேராத... பார்சி இனத்தைச் சேராத டாடா சன்ஸ் நிறுவனத்தின் முதல் தலைவர் என்.சந்திரசேகரன்.
இவர் 'நம்மூர் ஆள் தான்'. அதாவது, தமிழ்நாடு நாமக்கல்லில் மோகனூர் தான் இவர் பிறந்த ஊர்.
அரசுப் பள்ளியில் படித்த சந்திரசேகரன், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.
1987-ம் ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்தில் ஒரு இன்டெர்னாக காலடி எடுத்த வைத்த சந்திரசேகரன், 2007-ம் ஆண்டு அதே நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அதிகாரியாகவும், 2009-ம் ஆண்டு சி.இ.ஓ ஆகவும் உயர்ந்தார்.
இவர் டி.சி.எஸ்ஸில் சி.இ.ஓவாக இருந்த காலத்தில் தான், அந்த நிறுவனம் உலகம் முழுவதும் தனது கிளைகளைப் பரப்பியது. முக்கியமாக, அந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் $20 பில்லியன் டாலரைக் கடந்தது.
டாடா குழுமத்தின் தாய் நிறுவனம் 'டாடா சன்ஸ்' நிறுவனம். அதனால், டாடா குழுமத்தில் இந்த நிறுவனத்திற்கு தனி மவுசு உண்டு.
அப்படியான நிறுவனத்தின் தலைவர் பதவி 2017-ம் ஆண்டு சந்திரசேகரனிடம் வந்து சேர்ந்தது. டாடா குழுமத்தின் முதல் தொழில்முறை மேலாளர் இவர்தான்.
இவரது தலைமையின் கீழ், இந்தக் குழுமம் 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி வருமானத்தில் இருந்து ரூ.16 லட்சம் கோடியாக மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இதில் லாபம் ரூ.35,000 கோடியில் இருந்து ரூ.1.7 லட்சம் கோடி உயர்ந்திருக்கிறது.
டாடா குழுமத்தில் இவர் ஆற்றிய முக்கிய பணிகளில் ஒன்று - டாடா குழுமத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைத்ததாகவும்.
உதாரணத்திற்கு, டாடாவின் பானங்கள் வணிகத்தையும், டாடா கெமிக்கல்ஸின் நுகர்வோர் பொருட்கள் பிரிவையும் ஒன்று சேர்த்து டாடா கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார்.
அடுத்ததாக, பாரம்பரிய துறைகளைத் தாண்டி, செமிகண்டக்டர்கள், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, பேட்டரி தயாரிப்பு, விமானப் பாகங்கள் தயாரிப்பு, டிஜிட்டல் தளங்களிலும் டாடா குழுமம் கால் பதித்ததற்கு இவரது தலைமை முக்கிய காரணம்.
டாடா குழுமத்தில் இருந்து பிரிந்து இந்திய அரசிடம் சென்ற ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா குழுமத்திற்கே வந்தது இவரது தலைமை காலத்தில் தான்.
2017-ம் ஆண்டு இவர் தலைமைப் பொறுப்பிற்கு வந்தபோது, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நஷ்டம் ரூ.4,400 கோடி. ஆனால், அதன் தற்போதைய லாபம் ரூ.16,000 கோடிக்கும் மேல்.
இது மாதிரி பல டாடா நிறுவனங்களை லாபப் பாதைக்கு கொண்டு சென்றதில் என்.சந்திரசேகரனின் பங்கு முக்கியமாக உள்ளது.
இவரது தலைமைக் காலத்தின் போது, டாடா நிறுவனத்திற்கு சில பிரச்னைகளும் வந்துள்ளது. அதையும் மறுப்பதற்கில்லை.
ஏர் இந்தியா நிறுவனம் தற்போது டாடா குழுமத்தின் கையில் உள்ளது. தற்போதைய உலக சூழலில், எரிபொருள் விலை உயர்வு, வான்வெளி மூடல்கள் என விமான நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள்.
இதையெல்லாம் சமாளித்து ஏர் இந்தியா நிறுவனத்தை முழுமையாக மீட்டெடுக்க டாடா குழுமத்திற்கு 5-10 ஆண்டுகள் ஆகும்.
டாடா டிஜிட்டல் நிறுவனம் தற்போது ரூ.5,000 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
இது மாதிரியான சறுக்கல்களையும் மறுப்பதற்கில்லை.
டாடா குழுமத்திற்கு பல சிறப்புகளைச் சேர்த்த ஒரு நபர் தற்போது ஏன் வெளியேறுகிறார் என்கிற கேள்வி எழுகிறதா? அதற்கு தொழிலதிபர் ரத்தன் டாடாவின் தம்பி மற்றும் டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடா தான் காரணம்.
அதாவது டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியிலிட வேண்டும் என்பது என்.சந்திரசேகரனின் ஐடியா. ஆனால், இதை நோயல் டாடா விரும்பவில்லை.
ஒருவேளை, டாடா சன்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியிலிடப்பட்டால், டாடா குழுமத்தின் நிர்வாகத்தின் மாடல் மாறும். இதை நோயல் டாடா விரும்பவில்லை.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் கிட்டத்தட்ட 66 சதவிகித பங்கு டாடா அறக்கட்டளையிடம் தான் உள்ளது. அதனால், நோயல் டாடாவைத் தாண்டி சந்திரசேகரனால் எதுவும் செய்ய முடியாது.
ஏர் இந்தியா, டாடா டிஜிட்டல் போன்ற டாடாவின் எட்டு பட்டியிலிடப்படாத நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் ரூ.33,538 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. நஷ்டத்தில் செல்லும் நிறுவனங்களில் ஏன் அதிக பணம் போடுகிறீர்கள் என்பது நோயல் டாடாவின் கேள்வியாக இருந்திருக்கிறது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக பதவியேற்றப் போது, சந்திரசேகரனின் ஊதியம் ரூ.55.11 கோடி. 2025-26 நிதியாண்டில் அவருடைய சம்பளம் ரூ.158.66 கோடி. ஒரு பக்கம், சில நிறுவனங்கள் நஷ்டம் சந்தித்து வரும் வேளையில், சந்திரசேகரனுக்கு இவ்வளவு பெரியத் தொகை சம்பளம் என்பதும் நோயல் டாடாவின் யோசனையாக இருந்துள்ளது.
இவை எல்லாம் நோயல் டாடா மற்றும் சந்திரசேகரனுக்கு இடையே விரிசலாக மாறியுள்ளது.
நேற்று டாடா அறக்கட்டளையில் மீட்டிங் ஒன்று நடந்துள்ளது. வருகிற 18-ம் தேதி டாடா சன்ஸ் நிறுவனத்தில் ஒரு மீட்டிங் உள்ளது. இதில் சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பு குறித்து பேசப்படும் என்று முன்பு ஊகிக்கப்பட்டது.
அப்படி பேசினால், சிலர் இந்த நீட்டிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். இதை தவிர்க்கவே, முந்திக்கொண்டு முன்னெச்சரிக்கையாக தன்னுடைய முடிவை அறிவித்துள்ளார் சந்திரசேகரன் என்று கூறப்படுகிறது.
தற்போதைய உலகச் சூழல் மற்றும் பிசினஸ் சூழலில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் என்பது மிக கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டிய ஒன்று. டாடா குழுமத்தின் சாய்ஸ் யார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.