NTK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்
NTK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
Tamil Nadu By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் வேட்பாளர்கள் யார் யார்.?
நாம் தமிழர் கட்சியின் சார்பாக, மதுராந்தகம் தொகுதியில் கோ. ஜானகிராமனும், தாராபுரம் தொகுதியில் மு. கார்த்திகாவும் போட்டியிடுகின்றனர். புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி தொகுதியில் ச. கார்த்திக்குமாரி போட்டியிடுகிறார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடைபெறவுள்ள இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு, கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், பாசறைகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகள்
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ-க்களில், 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதுமட்டும் இல்லாமல், அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திலும் தங்களை இணைத்துக் கொண்டனர். அதனால், அந்த 6 தொகுதிகளும் தற்போது காலியாக உள்ளன. அது மட்டுமில்லாமல், 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார். இதனால், தமிழகத்தில் 7 தொகுதிகள் தற்போது காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர, மற்ற தொகுதிகளில், தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதால், தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும், வரும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி
தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், இடதுசாரிகள் இணைந்து இடைத்தேர்தலை தனியாக எதிர்கொள்ள உள்ளதாக இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. அவர்கள், நாளை மறுநாள் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி