Once More X Review - ஒன்ஸ்மோர் எக்ஸ் விமர்சனம்.. அதிதி
சென்னை: அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ஒன்ஸ்மோர். இதனை விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்பவர் இயக்கியிருக்கிறார். ட்ரெய்லர் எல்லாம் படத்தின் மீது ஓரளவு ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள். அதுகுறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி இப்போது ஹீரோவாக வலம் வருபவர் அர்ஜுன் தாஸ். அவர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். படமானது இன்று ரிலீஸாகவிருக்கிறது. சமீபத்தில்தான் படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் திரையிடப்படது. அதில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் முன்வைத்திருக்கிறார்கள்.
ஒன்ஸ்மோர் எக்ஸ் விமர்சனம்: படம் பார்த்த இந்த ரசிகர், "சிறந்த காட்சியமைப்புகளுடன் இசையை மையமாக கொண்ட காதல் கதையாக ஒன்ஸ்மோர் அமைந்திருக்கிறது. அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கரின் நடிப்பு படத்துக்கு பலம் சேர்த்திர்க்கிறது. கடந்த கால காதலை மறந்து வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கும் இளைஞரின் கதை. ஆனால் அவன் கடந்த காதல் திடீரென மீண்டும் அவனது வாழ்க்கைக்குள் வருகிறது.
அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. ஹெஷம் அப்துல் வயாப்பின் இசை அசத்தலாக இருக்கிறது. அவர்தான் ஆன்மாவாக இருக்கிறார். பாராட்டுக்கள் குவிய வேண்டும்: படத்துடைய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நிச்சயம் பாராட்டுக்கள் குவிய வேண்டும். மேலும் முதலமைச்சர் விஜய்க்கான சிறப்பு கார்டுடன் படம் தொடங்குகிறது" என குறிப்பிட்டிருக்கிறார்.
அழகான காதல் கவிதை: இந்த ரசிகர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "ஒன்ஸ்மோர் படத்தை ஸ்பெஷல் ப்ரீமியரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அரசியல் கலவரங்களுக்கு மத்தியில் நடுவில் ஒரு அழகான காதல் கவிதை. ரத்தம், துப்பாக்கி, வன்முறையை பார்த்து சலித்து போன நமது கண்களுக்கும், காதுகளுக்கும் மயிலிறகால் வருடப்படும் அற்புதமான காதல் கதை. 100 விழுக்காடு திருப்திப்படுத்தக்கூடிய காதல் படம்.லவ் டுடே, யூத், ஒன்ஸ்மோர் என விஜய்யின் பட டைட்டில் வைத்தாலே அது ப்ளாக்பஸ்டர்" என்று கொண்டாடியிருக்கிறார்.
ரசிகையின் கருத்து: இந்த ரசிகை தன்னுடைய பதிவில், "ஒன்ஸ்மோர்.. 5க்கு 3.5 மதிப்பெண். எந்தவித சமரசமும் இல்லாமல் ஒரு முழுமையான காதல் படத்தை நீங்கள் கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? ஒன்ஸ்மோர் புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியான உணர்வையும் தருகிறது. சிறு சிறு தருணங்களையும் அமைதியான உணர்வுகளையும் பதிவு செய்கிறது. அர்ஜுன் தாஸ் அசத்தியிருக்கிறார். படம் முழுக்க அவரது உணர்வுப்பூர்வமான நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது.
அதிதி ஷங்கரும் இயல்பாகவும், எளிமையாகவும் நடித்திருக்கிறார். அப்துல் வஹாப்பின் மெலோடிகளும் பின்னணி இசையும் பலம் சேர்க்கின்றன. படத்தை அடுத்தக்கட்டத்துக்கு உயர்த்துகின்றன. படத்தில் மொத்தம் 13 பாடல்கள். அனைத்துமே காதல் உணர்வுகளுக்கு பொருந்துகின்றன. இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த்துக்கு பாராட்டு. கண்டிப்பாக ஒன்ஸ்மோர் படத்தை பார்க்கலாம்" என புகழ்ந்துள்ளார்.
படத்துக்கு பாசிட்டிவ்தான்: இவரும் ஐந்துக்கு 4 மதிப்பெண் கொடுத்திருக்கிறார்.மேலும் அவர், "ஒன்ஸ்மோர் அழகான காதல் திரைப்படம். முக்கோண காதல் கதையை மையமாக கொண்ட இப்படத்தில் கடந்த கால காதல் முக்கியமான தருணத்தில் நிகழ்காலத்தில் மீண்டும் வருகிறது. சிறப்பான இசையும் படம் உருவாகியிருக்கிறது. காட்சியமைப்புகளும் ரொம்ப அழகாக இருக்கின்றன. அர்ஜுன் தாஸின் கேரக்டர் இரண்டு பரிமாணங்களை காட்டுகிறது. அதிதி ஷங்கருக்கு இதுவரையிலான சிறந்த நடிப்பு இதில்தான். அவருக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைக்க வேண்டும்.
இசை அருமை: சோனா ஒலிக்கல் அழகான அறிமுகம். எதிர்காலத்தில் கவனிக்கப்படக்கூடிய நடிகையாக தெரிகிறார். அப்துல் வஹாப் இந்தப் படத்தின் மற்றொரு ஹீரோ. இசைக்கும் பாராட்டுக்கள் குவிய வேண்டும். விக்னேஷ் ஸ்ரீகாந்த் உண்மையாக படத்தை உருவாக்கியிருக்கிறார். அவரது மேக்கிங்கும் சிறப்பு. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸிடமிருந்து வந்திருக்கும் மற்றோரு நல்ல படம். ஒன்ஸ்மோர் படத்தை தாராளமாக பார்க்கலாம்" என கூறியிருக்கிறார்.