ஒரு படம்தான் எடுக்கிறார்கள்.. சிரிப்பா வருது.. காண்டான சுந்தர்.சி.. என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சுந்தர்.சி. ஏராளமான ஹிட் படங்களை இயக்கியிருக்கும் அவர்; இப்போது மூக்குத்தி அம்மன் 2, புருஷன் ஆகிய இரண்டு படங்களை இயக்கிவருகிறார். இரு படங்களுமே ஹிட்டாகும் என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கிறது. இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் திடீரென ட்ரெண்டாகியுள்ளது.
கோலிவுட்டின் லெஜண்ட் இயக்குநர்களில் ஒருவர் மணிவண்ணன். அவரிடம் தொழில் கற்றுக்கொண்டு முறைமாமன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர்.சி. அந்தப் படத்தில் ஜெயராம், குஷ்பூ உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்படத்துக்கு பிறகு அவர் இயக்கிய மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட படங்கள் எல்லாம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. இதனால் அவர் கோலிவுட்டின் முன்னணி கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவராக மாறினார்.
குஷ்பூவுடன் திருமணம்: இதற்கிடையே முறைமாமன் படத்தில் நடித்தபோது நடிகை குஷ்பூவுக்கும், சுந்தருக்கும் காதல் மலர்ந்தது. அந்தக் காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து இரண்டு பேரும் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகும் இரண்டு பேரும் தங்களது துறைகளில் பிஸியாகவே இருந்தார்கள். குஷ்பூ மட்டும் அரசியலுக்கு சென்றார். சுந்தர் இயக்குவதோடு மட்டுமின்றி நடிகராகவும் பிஸியானார்.
இரண்டு படங்களில் பிஸி: அவரது இயக்கத்தில் கடைசியாக மதகஜராஜா திரைப்படம் வெளியானது. 12 வருடங்கள் கழித்து வெளியானாலும் படம் மெகா ஹிட். அதனைத் தொடர்ந்து ரஜினியை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தை முதிலில் சுந்தர்தான் இயக்குவதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறிவிட்டார். அதற்கு பதிலாக விஷால், தமன்னா, யோகிபாபு உள்ளிட்டோரை வைத்து புருஷன் என்ற படத்தை இயக்கிவருகிறார். இது தவிர்த்து நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தையும் இயக்கியிருக்கிறார்.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் அவர் சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் திடீரென ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "ஒரு படத்தை எடுத்துவிட்டு ரொம்ப ஆடுகிறார்கள். எனக்கு இப்போது நிறைய பேரை பார்த்தால் சிரிப்பாகத்தான் வரும். ஏனெனில் ஒரு படம்தான் செய்கிறார்கள். அதற்குள் சினிமா என்றால் என்ன தெரியுமா என பேச தொடங்கிவிடுகிறார்கள். பாலசந்தர், பாரதிராஜா படங்கள் மாதிரியெல்லாம் நாம் நினைத்துகூட பார்க்க முடியாது.
அட்வைஸ்தான் தோன்றும்: அந்த அளவுக்கு அவர்களுடைய படங்கள் இருக்கும். அவர்களே அவ்வளவு செய்துவிட்டு அடக்கமாகத்தான் இருக்கிறார்கள். நீங்கள் மட்டும் ஏன்டா இப்படி ஒரு படம் எடுத்துவிட்டு ஆடுறீங்க என்று கேட்க தோன்றும். நமக்கு அது வேண்டாம். படம் நன்றாக இருந்தால் ஓடப்போகுது. ரொம்ப பேசாதீர்கள் என எனக்கு அட்வைஸ் செய்யத்தான் தோன்றும்" என்றார்.