📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 13, 2026 03:04 PM

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு வாங்கும் ஒப்பந்தம் ஏன்?

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு வாங்கும் ஒப்பந்தம் ஏன்?

அமைச்சர் நிர்மல் குமார்

கோப்புப் படம்

“இந்த ஒப்பந்தம் வரும் 15 முதல் 31-ம் தேதி வரை மட்டும் தான். இதனால் ஒரு நாளைக்கு நமக்கு கூடுதலாக ரூ.5 கோடி மட்டுமே செலவாகும்” என அமைச்சர் விளக்கியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “மின் கொள்முதலுக்காக ஓர் ஒப்பந்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். உச்ச பயன்பாட்டு நேரமான மாலை 6 மணி முதல் 12 மணிவரை நமது தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த ஒப்பந்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் தமிழகத்தின் மின் தேவை 16,800 மெகா வாட்டாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டில் இப்போது 21,700 மெகாவாட் அளவுக்கு, அதாவது 30 சதவீதம் நமது மின் தேவை அதிகரித்துள்ளது. எல்-நினோ காரணமாக தமிழகத்தில் வெப்பம் குறையவில்லை, நாடு முழுவதும் இந்த நிலைதான் உள்ளது. இது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

எல்லா மாநிலங்களும் மின்சாரத்தை ஒன்றிய தொகுப்பில் இருந்துதான் வாங்குகிறோம். எனவே தேசிய அளவில் உற்பத்தி என்ன, தேவை என்ன என்ற முன்னறிவிப்பை செய்ய வேண்டும் என கடந்த வாரம் ஒன்றிய அமைச்சருடனான ஆலோசனையின் போது தெரிவித்தேன். முன்பே இதுபோல எங்களிடம் மின்சாரம் இருக்காது என ஒன்றிய அரசு தெரிவித்திருந்தால், நாங்கள் வேறு வகையில் ஏற்பாடு செய்திருப்போம்.

ஒன்றிய தொகுப்பில் மின்சாரம் இல்லாததால், இதுபோல அதிகவிலைக்கு வாங்கும் சூழல் ஏற்பட்டது. எனவே தான், கேஸ் மூலமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ.35-க்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர்களின் உற்பத்தி செலவு அதிகம் என்பதால் அதிக விலைக்கு வாங்குகிறோம்.

என்எல்சியின் ஒன்றிய தொகுப்பில் இருந்து வரவேண்டிய மின்சாரத்தில் 1850 மெகாவாட் கடந்த மாதத்தில் இருந்து தமிழகத்துக்கு வரவில்லை. அதுமட்டுமின்றி காற்றாலைகள் மூலம் 3500 மெகாவாட் மின்சாரத்துக்கு திட்டமிட்டிருந்தோம், அதில் 500 மெகாவாட்தான் கிடைக்கிறது. இது இரண்டும் நமக்கு கிடைக்காததால், நாம் புதிதாக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். இதனை செய்யவில்லை என்றால் மற்ற மாநிலங்களைப் போல நாமும் மின்வெட்டு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.

யூனிட் ரூ.35க்கு வாங்கும் மின்சாரம் என்பது 24 மணி நேரத்துக்கும் கிடையாது. உச்ச பயன்பாட்டு நேரமான 6 மணி நேரத்துக்கு மட்டுமே. இந்த ஒப்பந்தம் வரும் 15 முதல் 31ம் தேதி வரை மட்டும் தான். நாம் 3500 மெகாவாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளோம், ஆனால் 1500 மெகாவாட் மட்டும் தான் வாங்கப் போகிறோம். இதனால் ஒரு நாளைக்கு நமக்கு கூடுதலாக ரூ.5 கோடி மட்டுமே செலவாகும்.

அதுபோல தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கால தேவையை சமாளிக்க புதிய திட்டங்களை போட்டுள்ளோம். திமுக ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளில் நீண்ட கால ஒப்பந்தங்கள் எதுவும் போடப்படவில்லை. அதனால் தான் நாம் குறுகிய கால ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. நாம் இந்த மாதத்தில் நீண்ட கால ஒப்பந்தம் மற்றும் 5 ஆண்டுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளோம். கடந்த திமுக ஆட்சியில் மின்சார துறைக்கு 4 அமைச்சர்கள் மாறி மாறி இருந்தனர். அவர்கள் துறையாக முறையாக கவனிக்கவில்லை” என்றார்.