📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 21, 2026 11:34 PM

ஒருங்கிணைக்க நிர்வாகிகள் இல்லாததால் அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் தடுமாற்றம்

ஒருங்கிணைக்க நிர்வாகிகள் இல்லாததால் அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் தடுமாற்றம்

- நமது நிருபர் -

பா.ஜ.,வில் இருந்து விலகிய அண்ணாமலை தொடங்கியுள்ள, 'வீ தி லீடர்ஸ்' அமைப்பில் நிர்வாகிகள் நியமிக்கப்படாததால், அதில் இணைந்தவர்களிடம் தடுமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமைப்பில் இணைந்தவர்கள் கூறியதாவது: 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சார்பாக, போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும்படி, அண்ணாமலை உத்தரவிட்டார்.

தமிழகம் முழுதும் அமைப்பில் இணைந்தவர்கள், ஆங்காங்கே ஒன்று சேர்ந்து, மாரத்தான், பேரணி என, பல்வேறு வகை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். ஆனால், அவற்றை ஒருங்கிணைக்க நிர்வாகிகள் இல்லாததால், அந்த நிகழ்ச்சிகள், மக்கள் கவனத்திற்கு செல்லவில்லை.

அதேபோல், அமைப்பில் 50 லட்சம் பேரை இணைக்க, அண்ணாமலை இலக்கு நிர்ணயித்தார். அவர் அழைப்பு விடுத்த ஜூன் 5ம் தேதி, ஒரே நாளில் 12 லட்சம் உறுப் பினர்கள் இணைந்தனர். அதன்பின் உறுப்பினர் சேர்க்கை குறைந்து விட்டது. நகரங்களில் அண்ணாமலையை அறிந்தவர்கள், உறுப்பினர்களாக இணைந்து விட்டனர்.

கிராமங்களில் உள்ளவர்களை இணைக்க, கீழ்மட்ட அளவில் நிர்வாகிகள் இல்லை. எனவே, உறுப்பினர் சேர்க்கையை ஒருங்கிணைக்கவும், நிகழ்ச்சிகள் நடத்தவும் நிர்வாகிகள் அவசியம்.

மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய அளவில் நிர்வாகிகளை நியமித்தால், அவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து வேலை செய்வர்.

அண்ணாமலை அதிரடி அரசியல் செய்யாமல், நாகரிக அரசியல் செய்வதையும் மக்கள் ரசிக்கவில்லை. கட்சி தொடங்க காலதாமதம் ஏற்படும் என்பதும், உறுப்பினராக சேர்ந்தோரிடம் சோர்வை ஏற்படுத்தி உள்ளது. இதை போக்க, நிர்வாகிகளை நியமிப்பதோடு, அதிரடி முடிவுகளை அண்ணாமலை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடந்ததை தொடர்ந்து, இரண்டாவது மாநாட்டை திருச்செந்துாரில் நடத்துவதாக அண்ணாமலை அறிவித்தார். திருச்செந்துார் - திருநெல்வேலி சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் உள்ளதால், மாநாட்டை துாத்துக்குடியில் நடத்த முடிவு செய்துள்ளனர். வரும் ஆக., 15க்கு பின், துாத்துக்குடியில் மாநாடு நடைபெறும் என அவ்வமைப்பினர் கூறினர்.இதற்கிடையே, அமைப்பில் பா.ஜ.,வினர் சேர்வதை அண்ணாமலை விரும்பவில்லை என தெரிகிறது. பா.ஜ., நிர்வாகிகள் சேர்ந்தால், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பை, பா.ஜ.,வின் 'பி டீம்' என மற்ற கட்சியினர் பேச வாய்ப்பாகி விடும் என்று கருதுகிறார். எனவே, சமூக ஆர்வலர்கள், தொழில் முனைவோர் என இளைஞர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.