ஒவ்வொரு நிமிடமும் நெஞ்சில் சுமப்பேன்.. உங்களுக்கு பணியாற்றியது மகிழ்ச்சி.. திலீப் உருக்கம்
ஒவ்வொரு நிமிடமும் நெஞ்சில் சுமப்பேன்.. உங்களுக்கு பணியாற்றியது மகிழ்ச்சி.. திலீப் உருக்கம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விடைபெறும் டி. திலீப், தனது பயணம் குறித்து உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். மேலும், இந்த நினைவுகளைத் தனது வாழ்நாள் முழுவதும் நெஞ்சில் சுமந்து செல்லப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2021 நவம்பர் மாதத்தில், ஆர். ஸ்ரீதருக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் திலீப் இணைந்தார்.
எனினும், இந்திய அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. திலீப்புக்குப் பதிலாக மூத்த பயிற்சியாளர் சுபதீப் கோஷ் இந்தியாவின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 57 வயதான இவரின் முதல் பணி, ஆகஸ்ட் 15 அன்று தொடங்கவிருக்கும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராகும்.
கடந்த ஐந்து வருடங்களாக இந்திய அணியின் பயணத்தில் தனது பங்களிப்பை வழங்க முடிந்ததற்காக திலீப் நன்றியினை வெளிப்படுத்தியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள திலீப், "ஐந்து ஆண்டுகள். இவ்வளவு அர்த்தமுள்ள ஒரு பயணத்திற்கு சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "நான் முதன்முதலில் இந்த அமைப்பிற்குள் நுழைந்தபோது, ஒவ்வொரு நாளும் என்னிடம் உள்ள அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற எளிய நோக்கத்துடன் தான் வந்தேன். நான் நேசிக்கும் விளையாட்டிற்கு எனது பங்களிப்பை வழங்குவதற்கான ஒரு வழியாக ஃபீல்டிங் எப்போதும் இருந்து வருகிறது. இந்த அணியின் பயணத்தில் ஒரு பங்கினை வகிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததற்கு நான் என்றும் நன்றியுடையவனாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது திலீப் அறிமுகப்படுத்திய 'சிறந்த ஃபீல்டர் பதக்கம்' (Best Fielder Medal) ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இது அணியின் கலாச்சாரத்தை மேம்படுத்தியதாகவும், அந்த நினைவுகளை எப்போதும் போற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்திய கிரிக்கெட்டுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததற்கும், என் மீது நம்பிக்கை வைத்ததற்கும் BCCI-க்கு எனது மனமார்ந்த நன்றிகள். ராகுல் டிராவிட் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோரின் நம்பிக்கைக்கு எனது நன்றி. உங்களுடன் இணைந்து பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது," என்று திலீப் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், "ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கேப்டன்களாக இருந்த காலத்தில், உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் எனது பங்களிப்பை வழங்குவதற்கும் கிடைத்த வாய்ப்பை பெருமையக் கருதுகிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"ஒவ்வொரு வீரர், பயிற்சியாளர் மற்றும் உதவிப் பணியாளர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகள். நாம் இணைந்து உருவாக்கிய நினைவுகள் எனது வாழ்நாள் முழுவதும் என்னோடு இருக்கும். இந்த அத்தியாயம் முடிவுக்கு வரும் வேளையில், மறக்க முடியாத ஐந்து ஆண்டுகள் இந்திய அணியின் ஜெர்சி அணிந்த பெருமை எனக்குக் கிடைத்ததற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். எப்போதும் நன்றியுடன். பயணம் தொடர்கிறது," என்று திலீப் நெகிழ்ச்சியுடன் தனது பதிவை குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக 2024 மற்றும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2025 ஆசியக் கோப்பை ஆகிய தொடர்களை வென்றது இதில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.