பா.ஜ.க ஆசியில் த.வெ.க ஆட்சி... கொந்தளிக்கும் கூட்டணிக் கட்சிகள்!
பா.ஜ.க ஆசியில் த.வெ.க ஆட்சி... கொந்தளிக்கும் கூட்டணிக் கட்சிகள்!
டெல்லியில் போராடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைதுசெய்யப்பட்டார். வழக்கம்போல, இதற்கும் முதல்வர் விஜய் வாய் திறந்து கண்டனம் தெரிவிக்கவில்லை.
நீட்டைத் தொடர்ந்து எஸ்.ஐ.ஆர் விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன. ‘அடுத்து என்ன நடக்கும்...’ என ஒட்டுமொத்த நாடும் பரபரப்பில் தகிக்கிறது.
இது ஒருபுறமிருக்க, ``தமிழ்நாட்டில் மும்முனைப் போட்டி உருவாக எஸ்.ஐ.ஆர்-தான் காரணம். இல்லையென்றால், இருமுனைப் போட்டிதான் இருந்திருக்கும். த.வெ.க வெற்றிபெற்று ஆட்சியமைக்க, எஸ்.ஐ.ஆர் ஒரு காரணமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது” என்று கொளுத்திப்போட்டிருக்கிறார் வி.சி.க தலைவர் திருமாவளவன். ‘முதல்வர் விஜய் மீதான பாசத்தால்தான் பெருவாரியான மக்கள் த.வெ.க-வுக்கு வாக்களித்திருக்கிறார்கள்’ என அமைச்சர்கள் உருட்டிக் கலக்கும் நிலையில், திருமாவின் பேச்சு கூட்டணிக்குள் பெருத்த சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.
அடுத்தபடியாக, ‘`எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு நடந்த தேர்தல்கள் சட்டவிரோதமானவை. அந்தத் தேர்தல்களில் வென்ற சட்டப்பேரவைகளைக் கலைக்க வேண்டும்...’’ என்கிறார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே. அதாவது, காங்கிரஸ் அங்கம் வகிக்கும் த.வெ.க அரசாங்கத்தைக் கலைக்க வேண்டுமென, காங்கிரஸ் தலைவரே பகிரங்கமாக அறைகூவல் விடுத்திருக்கிறார். த.வெ.க-வின் கூட்டணிக் கட்சிகளே இந்த அளவுக்குப் பேசத் தொடங்கிவிட்டதால், “பா.ஜ.க ஆசியுடன்தான் த.வெ.க ஆட்சிக்கட்டிலில் அமரவைக்கப்பட்டதா...’’ என்கிற அனல் விவாதம், தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. என்னதான் விவகாரம்?
மெளனம் காக்கும் முதல்வர்... கொதிக்கும் கூட்டணிக் கட்சிகள்!
இந்திய தேர்தல் ஆணையம் முன்னெடுத்த ‘வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை’ குறித்து எதிர்க்கட்சிகள் ஆரம்பம் முதலே விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன. தமிழ்நாட்டில்கூட, அப்போது ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க., அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. 46 கட்சிகள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், ‘சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையைத் தொடரக் கூடாது’ எனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.
இந்தச் சூழலில், “எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் எங்களிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டார் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்...” என்று தேர்தல் ஆணையர்கள் இருவர் குற்றம் சுமத்தவும், இந்த விவகாரம் பூதாகரமானது. குறிப்பாக, அரசின் உரிய அனுமதி இல்லாமல் படிவம் 6-ல் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் சர்ச்சையாகின. எஸ்.ஐ.ஆரில் 13 கோடி வாக்குகள் நீக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லப்படும் நிலையில், ‘பா.ஜ.க-வுக்கு எதிரான வாக்குகளே அதிகம் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டனர்’ என்று குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன எதிர்க்கட்சிகள்.
“பா.ஜ.க எதிர்ப்பில் த.வெ.க-விடம் உறுதியில்லை!”
நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சீனியர் நிர்வாகிகள் சிலர், “பா.ஜ.க குறித்தான த.வெ.க-வின் பார்வையும் நடவடிக்கையும் பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றன. ‘எஸ்.ஐ.ஆர் நடைமுறையைத் தொடக்கத்திலிருந்தே எதிர்க்கிறோம். அதற்காக, ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவதில் எங்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை’ என்று பட்டும் படாமல்தான் பேசுகிறார்களே ஒழிய, பா.ஜ.க எதிர்ப்பில் உறுதியாக இல்லை.
‘சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை இரு முறை பாட வேண்டும்’ என்பது முந்தைய ஆளுநர்ஆர்.என்.ரவி வைத்த கோரிக்கை. அப்போதைய தி.மு.க அரசு, ரவியின் கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனால், த.வெ.க ஆட்சியின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தேசிய கீதம் இரு முறை பாடப்பட்டது. தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அத்தனை பேரையும் மாற்றிய த.வெ.க அரசு, பா.ஜ.க-வின் விருப்பப்படி தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தலைமைச் செயலாளரை மட்டும் மாற்றவில்லை. அவர் பா.ஜ.க-வின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறது. அவரைப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி இடதுசாரிகள் போராட்டம் நடத்திய பிறகும்கூட அந்த விஷயத்தில் த.வெ.க தரப்பில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை.
நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் இளைஞர்கள் போராடியபோது, அதன் தாக்கம் தமிழ்நாட்டிலும் எதிரொலித்தது. ‘அனிதாவின் மரணம் என்னை மனதளவில் ரொம்பவே பாதித்தது’ என்று உருகிய முதல்வர் விஜய், மாணவர்களின் போராட்டத்துக்குத் தன் பிரதிநிதிகளை அனுப்பி ஆதரவு தெரிவிக்கவில்லை. மாறாக, தமிழகத்தில் நடந்த போராட்டத்தை ஒடுக்கினார். பெரியார் திடலில் காவல்துறையைக் குவித்து அடக்குமுறை செய்தது த.வெ.க அரசு. நீட் எதிர்ப்பை மையப்படுத்தி திராவிடர் கழகம் பல ஆண்டுகளாகச் செய்துவரும் பரப்புரைக்கு இந்த ஆண்டு தடைவிதித்தனர்.
“பா.ஜ.க பெயரைக் கேட்டாலே பதறுகிறார்கள்!”
நீண்டகாலம் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் 20 பேர் கடந்த தி.மு.க ஆட்சியில் விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சியிருக்கும் சிறைவாசிகளுக்கும் பரோல் விடுப்பு வழங்கப்பட்டது. ஆனால், த.வெ.க ஆட்சி அமைந்த பின்னர் இஸ்லாமிய சிறைவாசிகள் பரோல் விடுப்பு கேட்டு பலமுறை முயன்றும், இதுவரை எதுவும் நடக்கவில்லை.
சட்டமன்றப் பேரவையில், ‘பா.ஜ.க’ என்ற பெயரை உச்சரித்தாலே சபாநாயகர் பதறுகிறார். அமைச்சர்கள் அலறுகின்றனர். பா.ஜ.க-வை விமர்சித்து யார், என்ன பேசினாலும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுகின்றன. அமைச்சர் வன்னி அரசு பேசிய பா.ஜ.க எதிர்ப்பு கருத்துகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிக வெளிப்படையாகவே கூறினார்.
‘பா.ஜ.க எதிர்ப்பில் த.வெ.க உறுதியாக நிற்கும்’ என்று நம்பித்தான் கூட்டணி அமைத்து, அமைச்சரவையிலும் பங்கெடுத்தது காங்கிரஸ். இப்போது, ‘ஏன் சேர்ந்தோம்’ என்ற மனநிலைக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டார்கள் த.வெ.க-வினர். ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக நாங்கள் முன்னெடுத்துவரும் நிலையில், அதற்கு நேர்மாறாக, ‘விஜய்தான் பிரதமர் வேட்பாளர்’ என்று பல அமைச்சர்களே பேசுகிறார்கள். அதை த.வெ.க தலைமையும் ரசிக்கிறது. ராகுல் காந்தியைச் சந்திப்பதையே பெருமளவு தவிர்க்கப் பார்க்கிறார் முதல்வர் விஜய். ஆனால், பிரதமர் மோடியுடன் இணக்கமாக இருக்க விரும்புகிறார்” என்று மனம் வெதும்புகிறார்கள்.
பா.ஜ.க ஆசியில் த.வெ.க ஆட்சி!
நம்மிடம் பேசிய த.வெ.க கூட்டணிக் கட்சித் தலைவர் ஒருவர், “த.வெ.க ஆட்சிக்கு பா.ஜ.க-வும் அனுசரணையாகவே இருக்கிறது. அதனால்தான், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகளான அ.தி.மு.க., அ.ம.மு.க எம்.எல்.ஏ-க்களை த.வெ.க தன்பக்கம் இழுப்பதை டெல்லி வேடிக்கை பார்க்கிறது. எஸ்.ஐ.ஆர் மூலமாக அதிகமாக வாக்குகள் நீக்கப்பட்ட தொகுதிகளில், த.வெ.க வெற்றி பெற்றிருப்பதிலும் ஓர் அரசியல் சூட்சுமம் ஒளிந்திருக்கிறது.
அதாவது, 10,000-க்கும் குறைவாக வாக்குகள் நீக்கப்பட்ட தொகுதிகளில், இரண்டு இடங்களில் த.வெ.க வெற்றிபெற்றிருக்கிறது. தி.மு.க ஏழு இடங்களிலும், அ.தி.மு.க ஆறு இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கின்றன. ஆனால், 50,000-க்கும் அதிகமாக வாக்குகள் நீக்கப்பட்ட 32 தொகுதிகளில் த.வெ.க 28 தொகுதிகளிலும், தி.மு.க மூன்று தொகுதிகளிலும், அ.தி.மு.க ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றிருக்கின்றன. 80,000-க்கும் அதிகமாக வாக்குகள் நீக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் த.வெ.க வெற்றி பெற்றிருக்கிறது. எஸ்.ஐ.ஆர் மூலமாகப் பயனடைந்திருப்பது த.வெ.க-தான். அதனால்தான், எஸ்.ஐ.ஆருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்துக்கு முதல்வர் ஆதரவு தெரிவிக்கவில்லை.
‘தமிழ்நாட்டில் இரண்டு திராவிடக் கட்சிகளையும் வீழ்த்த வேண்டும்’ என்கிற இலக்கோடு பயணிக்கும் பா.ஜ.க-வுக்கு, காலம் தந்த கொடைதான் த.வெ.க. முதல்வர் விஜய் மூலமாக தி.மு.க-வையும் அ.தி.மு.க-வையும் வீழ்த்திவிட்டு, த.வெ.க-வை ஓர் அரசியல் கணக்கோடு வளர்க்கிறது பா.ஜ.க. திராவிடம் இல்லாத ஓர் அரசியல் களத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு, த.வெ.க-வுக்கு எதிராகத் தங்களை முன்னிறுத்திக்கொண்டு, பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை தமிழகத்தில் ஜெயிக்கவைக்கத் திட்டம் போடுகிறார்கள்” என்று அரசியல் கணக்குகளைப் போட்டுடைத்தார்.
பா.ஜ.க - த.வெ.க... புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கிறதா?
கூட்டணிக் கட்சிகளிடம் இணக்கம் காட்டாதது, கொள்கைரீதியாகவே பா.ஜ.க-வை வலுவாக எதிர்க்காதது எனப் பல விவகாரங்கள், த.வெ.க தலைமைமீது அதன் கூட்டணிக் கட்சிகளிடம் அவநம்பிக்கையை உண்டாக்கியிருக்கின்றன.
நம்மிடம் பேசிய நா.த.க இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், “இது பா.ஜ.க-வின் பரிபூரண ஆசியோடு நடக்கும் ஆட்சி. குதிரைப் பேரக் குற்றச்சாட்டில் சிக்கியும் நடவடிக்கை எடுக்காதது தொடங்கி சட்டமன்றத்தில் எழுதிக்கொடுத்ததை அப்படியே ஆளுநர் வாசித்தது வரை த.வெ.க-வின் மீது பா.ஜ.க காட்டிய அணுக்கமே அதற்கு சாட்சி!
‘பா.ஜ.க-வை எந்தவிதத்திலும் எதிர்த்துவிடக் கூடாது’ என்பதில் த.வெ.க மிகுந்த கவனத்தோடு இருக்கிறது. ‘மதச்சார்பற்ற சமூக நீதிதான் எங்களுடைய கொள்கை’ என வாய்கிழியப் பேசும் த.வெ.க., மதச்சார்புகொண்ட ‘வந்தே மாதரம்’ எனும் பாடலைக் கட்டாயமாக்கும்போது வாய் திறக்கவில்லை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டபோது, முதல்வர் விஜய்யிடமிருந்து மருந்துக்குக்கூட எதிர்ப்பு வரவில்லை. கொளத்தூரிலேயே கொத்து பரோட்டா போட்டவர், ஆளுநரை ஆலு பரோட்டா போட்டிருக்க வேண்டாமா?
மெட்ரோ பாலத்தின் மீது ஏறி போஸ் கொடுத்தவர், மதுரைக்கும் கோவைக்கும் மெட்ரோ நிராகரிக்கப்பட்டது குறித்து மூச்சுவிடவில்லையே... 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றி, 40 விழுக்காடு நிதிச்சுமையை மாநில அரசின் மீது சுமத்தியிருக்கிறது மத்திய அரசு. அண்ணாவின் படத்தைப் போட்டு, வாக்கு கேட்ட விஜய், அதற்குப் பொங்கியிருக்க வேண்டாமா... சி.பி.ஐ விசாரணை முடிந்த நாளில் தனது வாகனத்தின் மீதேறி விஜய் காட்டிய உற்சாகமும் உடல்மொழியும், ஓராண்டாகியும் வெளிவராத சி.பி.ஐ-யின் குற்றப்பத்திரிகையும் ஒத்திசையும் புள்ளி எது... பா.ஜ.க-வுக்கும் த.வெ.க-வுக்கும் பரஸ்பரப் புரிதலும், புரிந்துணர்வு ஒப்பந்தமும் இருக்கின்றன என்பதுதானே...” என்றார்.
‘பா.ஜ.க - த.வெ.க இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறதா...’ என்று கேள்வி எழுப்புகின்றன எதிர்க்கட்சிகள். கூட்டணியில் இருக்கும் கட்சிகளே, அந்த கருத்தை ஒட்டிய மனநிலையில்தான் கொந்தளித்து முணுமுணுக்கின்றன. முதல்வர் விஜய் இன்னும் மெளனமாக இருப்பது, அவர் கொண்டிருக்கும் ‘மதச்சார்பற்ற’ கொள்கையின் மீது சந்தேகங்களை எழுப்ப ஆரம்பித்துவிடும். மெளனம் கலைப்பாரா... இல்லை கொந்தளிப்பை கண்டும் காணாமல் வழக்கம்போல் அமைதி காப்பாரா?