பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு: சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: ''பால் கொள்முதல் விலை, லிட்டருக்கு 44 ரூபாயாக உயர்த்தப்படும்; துாத்துக்குடியில் புதிய அனல் மின் உற்பத்தி அலகுகள் அமைக்கப்படும்; காஞ்சிபுரத்தில், 'செமி கண்டக்டர்' உற்பத்தி பூங்கா தொடங்கப்படும்,'' என, சட்டசபையில் நேற்று மூன்று முக்கிய அறிவிப்புகளை, முதல்வர் விஜய் வெளியிட்டார்.
தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு, பால் வழங்கும் 3.16 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயனடையும் வகையில், 1 லிட்டர் கொள்முதல் விலை, 38 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக உயர்த்தி, கடந்த 19ம் தேதி சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
பசுந்தீவனம், உலர் தீவனம், தவிடு, பிண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் மற்ற இடுபொருட்கள் விலை மிகவும் உயர்ந்துள்ளன. பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும் என்று, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அதை கனிவுடன் பரிசீலனை செய்து, கொள்முதல் விலையை லிட்டருக்கு 41 ரூபாயில் இருந்து, மேலும் 3 ரூபாய் உயர்த்தி, 44 ரூபாயாக வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.
கொள்முதல் விலை உயர்வால் ஏற்படும் செலவை, ஆவின் நிறுவனத்திற்கு அரசு வழங்கும். இந்த கொள்முதல் விலை உயர்வால், ஒரு மாதத்திற்கு 60 கோடி ரூபாயும், ஒரு ஆண்டுக்கு 720 கோடி ரூபாயும் செலவாகும்.
மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, சென்னை போன்ற முக்கிய மின் நுகர்வு மையங்களுக்கு திறம்பட கொண்டு செல்வதற்கான மின் தொடரமைப்பை மேம்படுத்துவது அவசியமாகிறது.
இதற்காக, அரசு தொலைநோக்குடன், 33,066 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 196 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய, 15,000 கி.மீ., நீளமுடைய புதிய மின் பாதைகள் அமைக்கப்படும்.
ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் புதிய அனல் மற்றும் நீர் மின் நிலையங்கள் அமைக்க, பெரிய அளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவில்லை.
அதிகரித்து வரும் மின் சுமையை திறம்பட கையாள, மின் உற்பத்தி துறையில் முதலீடுகளை மேற்கொள்வது அவசியம்.
துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தற்போது தலா 210 மெகாவாட் திறனில், ஐந்து நிலக்கரி அடிப்படையிலான உற்பத்தி அலகுகள் உள்ளன. இவற்றின் மொத்த நிறுவு திறன், 1,050 மெகாவாட்.
இந்த அலகுகள், 1979ம் ஆண்டு முதல் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங் களுக்கு பொருந்தக்கூடிய சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்க, தற்போதுள்ள அலகுகளை படிப்படியாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, துாத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில், பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில், தலா 800 மெகாவாட் திறனில் இரண்டு அலகுகள், மொத்தமாக 1,600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம், 20,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
சென்னையில் பருவ மழையால் ஏற்படும் மின் தடைகளையும், கோடைக் காலங்களில் அதிக மின் தேவை காரணமாக ஏற்படும் சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.
இதை கருத்தில் வைத்து, 36 இடங்களில் தலா 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
புதிய மின் பகிர்மான மின்மாற்றிகளை நிறுவுதல், சேதமடைந்த மற்றும் பயன்பாட்டு காலம் நிறைவடைந்த கேபிள்கள், மின்கடத்திகள், 'பில்லர் பாக்ஸ், சர்க்யூட் பிரேக்கர்ஸ்' உள்ளிட்ட உபகரணங்களை மாற்றுதல் போன்ற பணிகள், 1,762 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
'செமி கண்டக்டர்' துறையில் அதிக அளவு முதலீட்டை ஈர்க்கவும், இத்துறையில் நம் மாநிலத்தின் பங்கை கணிசமான அளவு உயர்த்தவும், காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில், 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'சிப்காட்' நிறுவனம் வாயிலாக, 'செமி கண்டக்டர்' தொழில் பூங்கா அமைக்கப்படும்.
இத்திட்டம் வாயிலாக, 2,000 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும்; 5,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
'டிஜிட்டல்' நிதி சேவைகளை உருவாக்கும் நோக்கத்தில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் வாயிலாக, கோவையில் டிஜிட்டல் நிதி மையம், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
தமிழகத்தின் முக்கிய இடங்களில், பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள், உலர் துறைமுகங்கள் அமைக்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருச்சி மண்டலத்தில், பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் அமைக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.