📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News August 08, 2026 02:33 PM

பாபர் அசாம் உடன் இணைத்து போலி போட்டோ.. பாகிஸ்தான் ரசிகர்கள் மீது இர்பான் பதான் குற்றச்சாட்டு

பாபர் அசாம் உடன் இணைத்து போலி போட்டோ.. பாகிஸ்தான் ரசிகர்கள் மீது இர்பான் பதான் குற்றச்சாட்டு

பாபர் அசாம் உடன் இணைத்து போலி போட்டோ.. பாகிஸ்தான் ரசிகர்கள் மீது இர்பான் பதான் குற்றச்சாட்டு

மும்பை: இர்பான் பதானுக்கு பேட்டி அளிக்க பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் மறுத்துவிட்டார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்தத் தகவல் முற்றிலும் போலி என்று தற்போது தெரியவந்துள்ளது. சமூக ஊடக யுகத்தில் ஆன்லைன் ட்ரோலிங் மற்றும் போலிச் செய்திகள் மிகவும் சாதாரணமாகிவிட்டன. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான், தான் எதிர்கொண்ட ஆன்லைன் நையாண்டி மற்றும் போலிச் செய்தி குறித்த ஒரு சுவாரசியமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது, பாகிஸ்தான் ஊடகம் ஒன்று ஒரு செய்தியை வெளியிட்டது. அதில், தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் பேசிய இர்பான் பதான், "இணையத்தில் இதுபோன்ற போலிச் செய்திகளும், தவறான பிரச்சாரங்களும் தினசரி நடக்கின்றன" என்று கூறினார்.

தொடர்ந்து அந்தப் போலியான செய்தியின் பின்னணியை விளக்கிய அவர், "அண்டை நாட்டு ஊடகம் ஒன்று, நான் பாபர் அசாமை பேட்டி எடுக்கச் சென்றதாகவும், அதற்கு அவர் 'இர்பான் பதான் எப்போதும் எங்கள் நாட்டை ட்ரோல் செய்கிறார், எனவே அவருக்கு நான் பேட்டி அளிக்க மாட்டேன்' என்று கூறி மறுத்துவிட்டதாகவும் செய்தி பரப்பியது. இது முற்றிலும் பொய். யாரோ ஒரு நபர் எனது முகத்தை மற்றொரு செய்தியாளரின் புகைப்படத்தில் போலியாகப் பொருத்தியுள்ளார் " என்றார்.

"உண்மையில் அந்தப் புகைப்படத்தில் இருந்தவர் ஒரு இளம் வங்கதேச நிருபர் ஆவார். அவர் மைதானத்திற்கு முதன்முறையாகச் சென்று பேட்டி கேட்க முற்பட்டபோது, பாபர் அசாம் அதற்கு மறுப்புத் தெரிவித்தார். ஆனால், அவரது உடலுடன் எனது முகத்தை ஒட்டி போலியான செய்தியை பரப்பினர். அந்தப் பொய் செய்திக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தன."

"மக்களும் அதை உண்மை என்று நம்பினர். இதுபோன்ற விஷயங்கள் தினமும் நடக்கின்றன, ஆனால் நான் இதற்குப் பதிலடி கொடுப்பதில்லை. ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவர் பெயரில் அல்லது ஒரு வீரரைப் பற்றி ஏதோ ஒரு பொய் கூறப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் நாம் பதிலளித்துக் கொண்டிருந்தால், அமைதியான வாழ்க்கையை வாழ முடியாது" என்றும் பதான் கூறினார்.

இர்பான் பதான் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கியப் பங்கு வகித்தார். குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்று இந்திய அணி கோப்பையை வெல்ல உதவினார். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 301 விக்கெட்டுகளையும், 2,821 ரன்களையும் இர்பான் பதான் குவித்துள்ளார்.