பார்லி இரு அவைகளும் ஒத்திவைப்பு; அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சிகளுக்கு சபாநாயகர் வேண்டுகோள்
நமது டில்லி நிருபர்
பார்லி மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 20ல் தொடங்கியது. வரும் 13 வரை நடக்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், லோக்சபா மற்றும் ராஜ்யசபா முடக்கப்பட்டு வருகின்றன. பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா மட்டுமே விவாதம் நடந்து நிறைவேறியது. மற்ற மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேறின.
இந்த கூட்டத்தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுடன் இணைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதேபோல, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவையும் நிறைவேற்றுவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு அவையை செயல்பட விடாமல் முடக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இன்றும் (ஆகஸ்ட் 07) இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மீண்டும் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு இருஅவைகளும் கூடும்.
சபாநாயகர் ஓம்பிர்லா வேண்டுகோள்
விவாதம் மூலமே ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும். நாட்டில் ஜனநாயகத்திற்கு வலுவூட்டி அதை வலுப்படுத்த வேண்டுமானால் விவாதமும், கலந்துரையாடலுமே அதற்கான வழி. தயவு செய்து உங்கள் இருக்கைகளில் அமர்ந்து கேள்வி நேரத்தை தொடர விடுங்கள். இவ்வாறு ஓம்பிர்லா கூறினார்.