பாட்ஷா படத்தில் தேவா சந்தித்த அவமானம்.. மனுஷன் அனைத்துக்கும் பொறுமையா இருந்திருக்காரு
சென்னை: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. ரசிகர்களால் தேனிசை தென்றல் என்று கொண்டாடப்பட்ட அவர்; சமீபமாக பிறரின் இசையில் பாடல்கள் பாடினார். சூழல் இப்படி இருக்க இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 76. அவரது உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மனசுக்கேத்த மகாராசா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா. முதல் படத்தின் பாடல்கள் ஹிட்டடித்ததை அடுத்து கவனிக்கப்படும் இசையமைப்பாளராக மாறினார். அடுத்தடுத்த படங்களில் மெலோடி, கானா என வெரைட்டியாக இசையை கொடுத்தார். எனவே ரசிகர்களால் தேனிசை தென்றல் என்று அழைக்கப்படுகிறார். 90களில் ஏ.ஆர்.ரஹ்மான் உச்சத்தில் இருந்தபோதும் தேவாவின் கொடியும் உயரவே பறந்தது.
முன்னணி ஹீரோக்கள்: 90களில் முன்னணி ஹீரோக்களாக இருந்த ரஜினி, கமல் அப்போது வளர்ந்துவரும் ஹீரோக்களாக இருந்த அஜித், விஜய், பிரசாந்த், சூர்யா என அனைவரது படங்களுக்கும் தேவா இசையமைத்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு இசையும் வேறு வேறு மாதிரி இருந்ததால் அத்தனையும் ஹிட்டடித்தன. குறிப்பாக ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் தொடர்ந்து தேவாவுக்கு வாய்ப்புகளை கொடுக்க ஆரம்பித்தனர்.
தேனிசை தென்றல்: தேவாவை பொறுத்தவரை எந்த ஜானரிலும் அசால்ட்டாக சிக்சர் அடித்தவர். ஆசை, அப்பு, முகவரி, குஷி, ஆஹா, காதல் கோட்டை, அருணாச்சலம், பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் என பல படங்களில் அருமையான மெலோடிகளை கொடுத்தவர். அவரது மெலோடி பாடல்கள் காலங்கடந்தும் இன்றும் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக 90ஸ் கிட்ஸுகளின் டாப் இசையமைப்பாளர்களின் லிஸ்ட்டில் முதல் ஐந்து இடங்களுக்குள் தேவா கண்டிப்பாக இருப்பார்.
கானாவை பெருமைப்படுத்தியவர்: முக்கியமாக ஒருதரப்பினரால் குறைத்து பார்க்கப்பட்ட கானா பாடல்களை சினிமாவில் வைத்து அதனையும் பெருமைப்படுத்தியவர் அவர். ஒருகட்டத்தில் தேவாவுக்கு மார்க்கெட் குறைந்ததை அடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பிறகு அனிருத், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இசையில் சில பாடல்களை பாடினார். இந்நிலையில் அவர் தனது 76வது வயதில் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தேவா சந்தித்த அவமானம்: அவர் எவ்வளவு தூரம் உயரத்துக்கு என்றாலும் மற்றவர்களை கடைசிவரை மதித்தே நடந்தவர். தேனிசை போன்றே தேன் குணமும் கொண்டவர்தான் அவர். ஆனால் அவர் திரைத்துறையில் நுழைந்த புதிதில் சில அவமானங்களை சந்தித்திருக்கிறார். முக்கியமாக ரஜினி ஹீரோவாக நடித்த பாட்ஷா படத்தின் வெற்றிக்கு தேவாவின் இசையும் முக்கியமான காரணங்களில் ஒன்று. அதை ரஜினியேகூட ஒத்துக்கொள்வார்.
ஆனால், அந்தப் படம் சமயத்தில் தனியார் பத்திரிகை ஒன்று திரை விமர்சனம் எழுதியதாம். அப்போது படத்தின் பற்றி இசையை பற்றி குறிப்பிடுகையில், 'படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பாக இசையமைத்திருக்கிறார்' என எழுதியிருந்தார்களாம். இதைப் பார்த்து ரொம்பவே வேதனைப்பட்டாராம் அவர். அந்த சம்பவத்தை பின்நாட்களில் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டிருந்தார் அவர்.