📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 12, 2026 09:01 AM

பெட்ரோல் பங்க்குகளில் இனி NO UPI

பெட்ரோல் பங்க்குகளில் இனி NO UPI

பெட்ரோல் பங்க்குகளில் இனி NO UPI-ஆ? டீலர்கள் சங்கம் எச்சரிக்கை..!

தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் டிஜிட்டல் முறையில் பணம் பெறுவதை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டிய சூழல் உருவாகலாம் என தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 7,000 பெட்ரோல் பங்க்குகள் செயல்பட்டு வரும் நிலையில், மொத்த விற்பனையில் கணிசமான அளவு கிரெடிட், டெபிட் கார்டுகள், கூகுள் பே உள்ளிட்ட டிஜிட்டல் வழிகளில் நடைபெறுவதாக சங்கம் தெரிவித்துள்ளது. இந்த பரிவர்த்தனைகளின் பின்னணி மற்றும் பணத்தின் மூலத்தை பெட்ரோல் பங்க் உரிமையாளர்களால் ஒவ்வொரு முறையும் அறிந்து கொள்வது சாத்தியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான புகார்கள் எழும்போது, அந்தப் பணம் சென்ற பெட்ரோல் பங்க்கின் டீலர்களிடமும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்துவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதுபோன்ற விசாரணைகளால் டீலர்கள் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகத்திற்குரிய டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பாக வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் சம்பவங்களும் டீலர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. வங்கி கணக்கு முடக்கப்பட்டால், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை உள்ளிட்ட அன்றாட வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டதற்காக பெட்ரோல் பங்க் டீலர்களை விசாரணைக்கு அழைப்பதும், அவர்களின் வங்கி கணக்குகளை முடக்குவதும் தொடர்ந்தால், தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் பங்க்குகளில் டிஜிட்டல் பண வசூலை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என சங்கம் எச்சரித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனை மீது சந்தேகம் இருந்தால், அதற்கான விவரங்களை டீலர்களிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்து, அதன்பின்னர் உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்பான விசாரணைகளில் காவல்துறை மற்றும் வங்கிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.