📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 28, 2026 05:30 PM

பிஎம் ஸ்ரீ: சமஸ்கிருதத்திற்கு 6,000, தமிழுக்கு 12 ஆசிரியர்கள்

பிஎம் ஸ்ரீ: சமஸ்கிருதத்திற்கு 6,000, தமிழுக்கு 12 ஆசிரியர்கள்

புதுடெல்லி: இந்திய அரசு நாடு முழுவதும் செயல்படுத்தி வரும் ‘பிஎம் ஸ்ரீ’ திட்டத்தின்கீழ் இயங்கும் பள்ளிகளில் ஏறக்குறைய 6,100 சமசுகிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பது புது விவாதங்களை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

நாடு முழுவதும் ‘பிஎம்ஸ்ரீ’ திட்டத்தின்கீழ் இயங்கும் பள்ளிகளின் எண்ணிக்கை, இந்தி அல்லாத மற்ற தாய்மொழிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து அவர் மத்தியக் கல்வி அமைச்சிடம் விவரங்கள் கோரியிருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விகளுக்குக் கல்வி அமைச்சு பதில் அளித்துள்ளது.

நாடு முழுவதும் ஏறக்குறைய 13,000 பள்ளிகள் ‘பிஎம்ஸ்ரீ’ திட்டத்தின்கீழ் இயங்குவதாகவும் இந்த எண்ணிக்கையை 14,000க்கும் மேல் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அளித்த தரவுகளின்படி, உத்தரப் பிரதேசத்தில் ஆக அதிகமாக 1,888 பள்ளிகள் இயங்குவது தெரிய வந்துள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் சமசுகிருதத்திற்கு 6,102 ஆசிரியர்களும் பிற தாய்மொழிகளைக் கற்பிக்க 9,152 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ‘பிஎம்ஸ்ரீ’ திட்டத்தின்கீழ் இயங்கும் 36 பள்ளிகளில் 41 சமசுகிருத ஆசிரியர்களும் 12 தமிழ் ஆசிரியர்களும் உள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்திருப்பது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

24,000 பேர் பேசும் சமசுகிருதத்தைக் கற்பிக்க 6,100 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழு கோடி பேர் பேசும் தமிழைக் கற்பிக்க 12 ஆசிரியர்கள் மட்டும்தானா என்று சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அனைத்துப் பள்ளிகளிலும் சமசுகிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதுதான் பிரதமர் மோடியின் பெருமையைப் பேசும் ‘சிஎம்ஸ்ரீ’ பள்ளிகளின் புள்ளிவிவரம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின்கீழ் நாட்டில் 0.002 விழுக்காட்டினர் மட்டுமே அதாவது, 24,821 பேர் மட்டுமே பேசும் ஒரு மொழிக்காக 6,102 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது ‘சாக்குக்குள் ஒளிந்திருக்கும் பூனை சம்சுகிருதம்’ என்பதைத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார் சு.வெங்கடேசன்.

இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியாக சமசுகிருதம் பேசுபவர்களைச் சேர்த்தாலும்கூட, ஒரு விழுக்காடுகூட வரவில்லை என்றும் ஏற்கெனவே ஒளியாத பூனையாக இந்தி சுற்றி வந்துகொண்டிருக்கிறது என்றும் சு.வெங்கடேசன் தமது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தாய்மொழியைப் பாதுகாத்து வளர்ப்பதுதான் புதிய கல்விக்கொள்கை, ‘பிஎம்ஸ்ரீ’ பள்ளிகளின் நோக்கம் என்று பிரதமர் மோடி பெருமை பேசுவதாகக் குறிப்பிட்டுள்ள சு.வெங்கடேசன், அண்மைய புள்ளிவிவரங்கள் திரு மோடியின் மும்மொழிக் கொள்கையை முற்றாக அம்பலப்படுத்திவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.