📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 18, 2026 06:33 PM

பிரதமர் மோடி ராஜினாமா செய்ய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்

பிரதமர் மோடி ராஜினாமா செய்ய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் கலந்து கொண்டு தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். உண்ணாவிரதப் போராட்டத்தின் 21-வது நாளான இன்று டெல்லி போலீசாரால் அவர் அங்கிருந்து அகற்றப்பட்டார். சப்தர்ஜங் மருத்துவமனையில் சோனம் வாங்சுக் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

போராட்டக்களத்தில் இருந்து சோனம் வாங்சுக் அப்புறப்படுத்தப்பட்டதற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜித் தீப்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் இருந்து சோனம் வாங்சுக் அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து, அபிஜித் தீப்கே சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளார்.

ஜந்தர் மந்தரில் கூடி இருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அபிஜித் தீப்கே, “சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டது முற்றிலும் தவறானது. இதுபோன்ற நடவடிக்கையை நமது அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை. இது அப்பட்டமான சர்வாதிகாரம்.

இதுவரை நாங்கள் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி வந்தோம். இந்த இழிவான செயலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

நாங்கள் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து அகற்றச் சொன்னால் அவர்கள், சோனம் வாங்சுக்கை ஜந்தர் மந்தரில் இருந்து அகற்றுகிறார்கள். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

ஜந்தர் மந்தரை நோக்கி பொதுமக்கள் பெருமளவில் திரள வேண்டும். அபிஜித் தீப்கே ஏன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். இப்போது அவர்கள் ஜந்தர் மந்தருக்கு வர வேண்டும். அரசாங்கத்தை நோக்கி கேள்வி கேட்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?” என தெரிவித்தார்.

அபிஜித் தீப்கே பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது பெண் ஒருவர் மை வீசினார். அபிஜித் தீப்கேவின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் அவர் மை வீசினார். இதையடுத்து அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், அங்கிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டதற்கு காங்கிரஸ், சிவ சேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியாவில் ஜனநாயகம் பலவந்தமாக சிதைக்கப்படுவதாகவும் அவை விமர்சித்துள்ளன.