📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 12, 2026 11:04 AM

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு: தடையை மீறி போராடிய 20 மாணவர்கள் கைது

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு: தடையை மீறி போராடிய 20 மாணவர்கள் கைது

திண்டுக்கல்: பிரதமர் மோடி தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர் அமைப்புகள் சார்பில் திண்டுக்கல்லில் நேற்று நடந்த போராட்டம், தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கிச் சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்தனர்.

முடிவுற்ற மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை துவக்கி வைப்பதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தலைமை தேர்தல் கமிஷ்னர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் கறுப்புக்கொடி, கறுப்பு பலுான்களை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இப்போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம், போராட்டம் நடக்கக்கூடாது என்பதற்காக பஸ் ஸ்டாண்ட் பகுதியில் டி.எஸ்.பி., கார்த்திக் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு திடீரென வந்த மாணவர் சங்கத்தினர், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு பலுான்கள் பறக்கவிட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட போலீசார், அவற்றை கைப்பற்றி உடைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் சங்கத்தினர் ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி அவர்கள் தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கிச் சென்றனர். மொத்தம் 20 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.