📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 18, 2026 10:00 AM

பல உயிர்களைக் காத்த மோப்ப நாய்க்கு வீரதீரச் செயலுக்கான ராணுவ விருது

பல உயிர்களைக் காத்த மோப்ப நாய்க்கு வீரதீரச் செயலுக்கான ராணுவ விருது

புதுடெல்லி: மோப்ப சக்தி மூலம் வெடிகுண்டுகளை முன்கூட்டியே கண்டறிந்து ஏராளமான உயிர்கள் பலியாவதைத் தடுத்த மோப்ப நாய்க்கு இந்திய ராணுவத் தளபதியின் பாராட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

வீரதீரச் செயலுக்காக வழங்கப்படும் அந்த விருது, பயங்கரவாத எதிர்ப்புப் படையைச் சேர்ந்த ‘டானி’ என்னும் அந்த துப்பறியும் நாய்க்கு ஆகஸ்ட் 15 சுதந்திரத் தினத்தன்று வழங்கப்பட்டது.

2025 நவம்பர் மாதம் டெல்லியின் செங்கோட்டையில் நிகழ்ந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர், 32 பேர் படுகாயமடைந்தனர்.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், உயர்தர கே9 பிரிவைச் சேர்ந்த டானி முக்கிய பங்காற்றியது. வெடிகுண்டுகளைக் கண்டறிதலில் நிபுணத்துவம் பெற்றிருந்ததால் 2025 நவம்பர் 10ஆம் தேதி அந்தப் பணியில் அது சேர்க்கப்பட்டது.

குண்டுவெடிப்பு நடந்த இடத்தை முழுமையாக ஆய்வு செய்து மேலும் குண்டுகள் வெடிக்காமல், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியில் டானி ஈடுபடுத்தப்பட்டது.

இடிபாடுகளுக்கும் தீவிர அச்சுறுத்தல்களுக்கும் இடையிலும், அந்த ‘கமாண்டோ’ நாய் வெடிபொருள்களின் தடயங்கள் இருப்பதைக் கண்டறிந்தது.

தடயவியல், பாதுகாப்புப் படைகள் அப்பகுதியைப் பாதுகாப்பானதாக மாற்றவும் அடுத்தகட்டத் தாக்குதல்களைத் தடுக்கவும் அந்தச் செயல் உதவியது.

டானியின் பணி அத்துடன் முடிந்துவிடவில்லை.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அடுத்த இரு நாள்களில், ஃபரிதாபாத்தின் கண்டாவலி பகுதியில் செங்கோட்டைத் தாக்குதலுடன் தொடர்புடைய வெடிபொருள்களை ஏற்றிச்சென்றதாகச் சந்தேகிக்கப்பட்ட ஒரு வாகனத்தை ஆய்வு செய்யும் பணியும் அதனிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் துல்லியமான மோப்பத் திறன் வெடிபொருள்கள் இருப்பதை உறுதிப்படுத்தியது. அதனால், மேலும் சேதத்தை விளைவிக்கும் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டன.