பள்ளிகள் இனி லஞ்சம் வழங்க தேவையில்லை! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி
கோவை: ''தனியார் பள்ளிகள் உரிமம் மற்றும் புதுப்பித்தலுக்காக, இனி எந்தவித லஞ்சமும் வழங்க தேவையில்லை,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
கோவை வ.உ.சி. மைதானத்தில், 39வது அரசு பொருட்காட்சியை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று திறந்து வைத்தார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சிங்கப்பெண் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வீடியோவில் பிழை ஏற்பட்டது. அரசு நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பப்படும் வீடியோக்கள், இனி தமிழ் வளர்ச்சித் துறையின் ஒப்புதலுக்குப் பிறகே வெளியிடப்படும்.
பள்ளி மாணவர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களுக்கு இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதால், அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள மாநில மற்றும் மாவட்ட அளவிலான விருதுகள் விரைவில் வழங்கப்படும்.
தனியார் பள்ளிகளின் உரிமம் மற்றும் புதுப்பித்தலுக்கான நடைமுறைகள் ஒற்றைச்சாளர முறையில் எளிமையாக்கப்பட்டுள்ளன. அதனால் இடைத் தரகர்கள் வழியாக அங்கீகாரம் புதுப்பித்தல் போன்ற முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை. பள்ளிகள் எந்தவித லஞ்சமும் வழங்க தேவையில்லை.
அதற்கு பதிலாக, பள்ளிகள் தங்களது கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவித்து, நியாயமான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு பொருட்காட்சி, 45 நாட்கள் நடக்கிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட 26 அரசு துறை, 6 அரசு சார்ந்த நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கு ரூ.10 மற்றும் பெரியவர்களுக்கு ரூ.15 நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 மட்டும் வசூலிக்கப்படும்.