பள்ளிவாசல்கள் திறந்திருக்கும்: புகைமூட்ட எச்சரிக்கைகள்
சிங்கப்பூரில் உள்ள பள்ளிவாசல்கள் தொடர்ந்து திறந்திருக்கும் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) திங்கட்கிழமை (அக்டோபர் 12) தெரிவித்துள்ளது.
தற்போதைய புகைமூட்ட நிலவரத்திற்குத் தக்கவாறு தொழுகை ஏற்பாடுகள் மாற்றியமைக்கப்படக்கூடும் என்று அது கூறியது.
வழிபாட்டாளர்கள், அன்றாடத் தொழுகைகளுக்கும் வெள்ளிக்கிழமை கூட்டுத் தொழுகைகளுக்கும் தொடர்ந்து பள்ளிவாசல்களுக்கு வரலாம் என்று முயிஸ் சொன்னது. இருப்பினும், 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு, 201 முதல் 300 வரையிலான ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ நிலையை எட்டினால் அங்குத் திட்டமிடப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற வெளிப்புற நிகழ்ச்சிகள் நிறுத்தப்படும் என்று அது குறிப்பிட்டது.
பள்ளிவாசல்கள், மதரசாக்கள், பள்ளிவாசல் சார்ந்த பாலர்பள்ளிகளுக்கான புகைமூட்ட ஆயத்த நடவடிக்கைகள் குறித்து முயிஸ் வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
புகைமூட்ட நிலைமை, உள்ளரங்கு வசதிகள், தேசிய சுகாதார வழிகாட்டுதல்கள் முதலியவற்றுக்கு ஏற்ப, தொழுகை ஏற்பாடுகள் மாற்றியமைக்கப்படக்கூடும் என்றும் பள்ளிவாசல்களுக்கு புகைமூட்ட ஆயத்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அது மேலும் தெரிவித்தது.
வழிபாட்டாளர்கள், குறிப்பாக முதியவர்களும் ஏற்கெனவே உடல்நலக் குறைபாடு உள்ளவர்களும் வெளிப்புறங்களில் அதிக நேரம் இருப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று முயிஸ் அறிவுறுத்தியுள்ளது.
புகைமூட்ட நிலவரத்தைத் தொடர்ந்து உன்னிப்பாய்க் கண்காணித்து, தேவைக்கேற்ப நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்கவிருப்பதாக அது தெரிவித்தது. இதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து செயல்படவிருப்பதாகவும் முயிஸ் குறிப்பிட்டது.