பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் போராட்டம்: 450 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் போராட்டம்: 450 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு
சென்னை: சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் நடத்திய மருத்துவப் பணியாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பணி நிரந்தரம் மற்றும் மாதம் ஒரு நாள் கட்டாய விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் இருந்து வந்த அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தினர் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததுடன், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட பணியாளர்களை காவல் நிலையங்களிலும், வீட்டுக் காவவலிலும் தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற மருத்துவப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு சமூக நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, பொதுமக்களுக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த 450 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.