பனிப்பாறையை தாண்டி சிக்ஸ் அடித்தால் இலவசமாக பாகிஸ்தான் சென்று நக்வியை சந்திக்கலாம்.. ஐஸ்லாந்து கலாய்
பனிப்பாறையை தாண்டி சிக்ஸ் அடித்தால் இலவசமாக பாகிஸ்தான் சென்று நக்வியை சந்திக்கலாம்.. ஐஸ்லாந்து கலாய்
லண்டன்: இங்கிலாந்திடம் அடி வாங்கி பரிதாபமாக தவிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும், அதன் தலைவர் மொஹ்சின் நக்வியையும் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் சமூக வலைதளத்தில் அநியாயத்துக்கு வறுத்தெடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்து 0-2 என பின்தங்கியுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தொடரின் பாதியிலேயே 7 முன்னணி வீரர்களை அதிரடியாக வீட்டுக்கு அனுப்பியது.
இந்த விசித்திர முடிவை நையாண்டி செய்து ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் ஐஸ்லாந்து கடலில் இரண்டு பெரிய பனிப்பாறைகள் மிதந்து வந்துள்ளன. அந்த புகைப்படத்தை வெளியிட்டு, "கடற்கரை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு புது சவால். பனிப்பாறையை தாண்டி சிக்சர் அடிப்பவர்களுக்கு, பாகிஸ்தான் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியை சந்தித்து அணித் தேர்வு குறித்து பாடம் படிக்க இலவச கல்விச் சுற்றுலா பரிசாக வழங்கப்படும். விருப்பப்பட்டால் அது திரும்பி வராத ஒருவழிப் பயணமாகவும் இருக்கலாம்" என மரண கலாய் கலாய்த்துள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விகளை விமர்சித்தவர்கள் மீது கோபம் கொண்ட பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், கிரிக்கெட் வாரிய தலைவருமான மொஹ்சின் நக்வி, "வாழ்க்கையில் உருப்படியாக எதையும் சாதிக்காதவர்கள் தான் பாகிஸ்தான் அணியை விமர்சிக்கிறார்கள்," என சாஹித் அப்ரிடி, ரஷித் லத்தீப், முகமது யூசுப் போன்ற முன்னாள் வீரர்களை சாடினார். மேலும், பலவீனமான அயர்லாந்திடம் இந்தியா டி20 போட்டியில் தோற்கவில்லையா என சம்பந்தமே இல்லாமல் பேசி முட்டுக்கொடுத்தார்.
மேலும் ஒருநாள் தரவரிசையில் 8ல் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறிவிட்டோம், வெற்றி சதவீதம் 24ல் இருந்து 73 ஆக உயர்ந்துள்ளது என புள்ளிவிவரங்களை அடுக்கினார். சுமார் 3 முதல் 6 மாதங்களில் 9வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறிவிட முடியாது எனவும் பாகிஸ்தான் அணி நன்றாக ஆடுவது போல பேசினார்.
ஆனாலும், அவரது பேச்சுக்கள் பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியிலேயே எடுபடவில்லை. சொந்த நாட்டிலேயே மூக்குடைபட்டு நிற்கும் மொஹ்சின் நக்வியை, எங்கோ இருக்கும் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியமும் இழுத்து வைத்து காய்ச்சி எடுத்துள்ளது.