போக்சோ வழக்கில் செம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கைது
போக்சோ வழக்கில் செம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கைது
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த தண்டலம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் மனோகரன் (52). இவர் திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் உள்ள செம்பாக்கம் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். செம்பாக்கம் கிராமத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவை தனித்தனியே உள்ளது. தொடக்கப்பள்ளியில் படித்து முடித்து மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு முதல் பயிலும் மாணவி, மாணவிகள் சிலர் தாங்கள் ஏற்கனவே பயின்ற தொடக்கப் பள்ளிக்கு வந்து பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துவது, 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுவர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இதுபோன்று பள்ளிக்கு உதவிகள் புரிய வந்த 6ஆம் வகுப்பு மாணவியை தனியே அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர் தாமஸ் மனோகரன் அவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தொிகிறது. இதுகுறித்து அந்த மாணவி பெற்றோரிடம் கூறியதை அடுத்து அவரது பெற்றோர் சிங்கப்பெண் போலீஸ் கட்டுப்பாட்டு எண்ணில் தகவல் கூறி உள்ளனர். இதையடுத்து திருப்போரூர் சிங்கப்பெண் பிரிவு எஸ்.ஐ. கண்ணகி பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி அந்த அறிக்கையை மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பினர்.
அதன் அடிப்படையில் மாமல்லபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து செம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் மனோகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தலைமை ஆசிரியர் தாமஸ் மனோகரன் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.