போதைப்பொருள் ஒழிப்பு: உதயநிதி
சென்னை: போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே காரசார விவாதம் நடந்தது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: கடந்த 2020ம் ஆண்டுக்கு முன் தமிழகத்தில் போதை கலாசாரம் இல்லை. அதன்பின் அதிகரித்துள்ளது. ஒரு இடத்தில் போதை கலாசாரம் உருவானால், அங்கு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கும்.
தமிழகத்தில், 2020ல் 4,338 போக்சோ வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2024ல், 10,046 வழக்கு களாக அதிகரித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் என்ன பதில் சொல்லப்போகிறார்?
த.வெ.க., ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க, 264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 65 போதைப்பொருள் தடுப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
தி.மு.க., ஆட்சியில் இதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது. போதைப்பொருள் நடமாட்டத்திற்கு அடித்தளமிட்டது தி.மு.க., ஆட்சியில் தான். அதனால் தான், மக்கள் அந்த ஆட்சியை துாக்கி எறிந்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி: தி.மு.க., ஆட்சியில் போதைப்பொருள் தடுப்புக்கு புதிய பிரிவை, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உருவாக்கினார். இது தொடர்பான புள்ளிவிபரம் அமைச்சரிடம் இருக்கும். தேவைப்பட்டால், கூடுதல் தகவல்களை, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் பெற்றுக் கொள்ளலாம். தி.மு.க., ஆட்சியில் போதைப்பொருள் தடுப்புக்கான புதிய பிரிவை, அவர்தான் தலைமை ஏற்று வழிநடத்தினார்.
அவர் சிறப்பாக செயல்படவில்லை என்றால், எதற்காக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் என்ற பெரிய பொறுப்பை, அவரிடம் வழங்கியுள்ளீர்கள்? போதைப்பொருள் ஒழிப்பு, கடத்தல் தடுப்பு பணியை சிறப்பாக மேற்கொண்ட, 15 காவல் துறை அதிகாரிகளுக்கு, முதல்வர் விஜய் விருது அறிவித்துள்ளார்.
எங்கள் ஆட்சியில், சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு தான் அந்த விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவர்கள் என்னென்ன போதைப்பொருட்களை கண்டுபிடித்தனர்; எத்தனை குற்றவாளிகளை கைது செய்தனர் என்பதை, அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, எங்கள் ஆட்சியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், முதல்வர் எப்படி விருது அறிவித்தார்?
அமைச்சர் விக்னேஷ்: காவல் துறை அதிகாரிகள் 15 பேருக்கு விருது கொடுத்ததாக குறிப்பிடுகிறார். இது புதிய நடைமுறை கிடையாது. ஜெயலலிதா காலத்தில் இருந்தே இந்த விருதுகளை கொடுக்கின்றனர்.
போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க, 100 நாள் த.வெ.க., ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கான விபரத்தை மானியக் கோரிக்கையில் தெரிவிக்கிறேன்.
உதயநிதி: அமைச்சர் சொல்வது தவறான தகவல். இந்த விருது வழங்கும் திட்டம், 2023ம் ஆண்டு தான் அறிமுகம் செய்யப்பட்டது. அதை புரிந்து அமைச்சர் பேச வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.