📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 17, 2026 05:30 PM

போட்டி நிறுவனத்துடன் ‘விலை’ பேச்சுவார்த்தை; ‘ஹலோபைக்எஸ்ஜி’க்கு எச்சரிக்கை

போட்டி நிறுவனத்துடன் ‘விலை’ பேச்சுவார்த்தை; ‘ஹலோபைக்எஸ்ஜி’க்கு எச்சரிக்கை

சிங்கப்பூரில் மிதிவண்டிப் பகிர்வுச் சேவையை வழங்கி வரும் ‘ஹலோபைக்எஸ்ஜி’ நிறுவனம், தனது போட்டி நிறுவனமான ‘எனிவீல்’ நிறுவனத்துடன் கட்டண விலை குறித்து கலந்துரையாட முயன்றதற்காகச் சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் அதற்கு எழுத்துபூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘எனிவீல்’ நிறுவனம் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட புலன்விசாரணையில், ‘ஹலோபைக்எஸ்ஜி’ நிறுவனத்தின்கீழ் இயங்கும் ‘ஹலோரைட்’டின் முதன்மைப் பிரதிநிதி ஒருவர், 2025ஆம் ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் ‘எனிவீல்’ நிறுவனப் பிரதிநிதியுடன் இருமுறை தொடர்புகொண்டு கட்டணம் குறித்து கலந்துரையாட அழைப்பு விடுத்தது உறுதி செய்யப்பட்டது.

எனினும், அந்த அழைப்பை ஏற்க மறுத்த ‘எனிவீல்’ நிறுவனம், இதுகுறித்து உடனே ஆணையத்திடம் புகார் அளித்தது. வர்த்தக ரீதியிலான ரகசியத் தகவல்கள் எதுவும் பரிமாறப்படாமலும் எவ்விதக் கட்டணக் கலந்துரையாடல்களும் நடைபெறாமலும் இருந்ததால், ‘ஹலோரைட்’டின் இச்செயல் போட்டித்தன்மைச் சட்டத்தை மீறியதாகக் கருதப்படவில்லை என்று ஆணையம் விளக்கியுள்ளது.

சிங்கப்பூரில் கைப்பேசிச் செயலிகள் மூலம் தற்காலிக மிதிவண்டி வாடகைச் சேவையை வழங்கும் உரிமம் பெற்ற நிறுவனங்களாக இவை இரண்டு மட்டுமே திகழ்கின்றன.

இதனால், இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையே விலை நிர்ணயம் குறித்து எந்தவொரு கலந்துரையாடலும் நடந்திருந்தால், அது சந்தைப் போட்டித்தன்மையிலும் பயனீட்டாளர்கள் மத்தியிலும் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து விளக்கமளித்துள்ள ‘ஹலோரைட்’, ரயில் கட்டண உயர்வு, போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து பேசவே கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மிதிவண்டி பகிர்வுச் சேவைக்கான விலையைப் பற்றி கலந்துரையாடும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது. நேர்மையாகச் செயல்பட்டு உடனடியாகப் புகாரளித்த ‘எனிவீல்’ நிறுவனத்தைப் பாராட்டியுள்ள ஆணையம், வர்த்தகச் சந்தையில் போட்டிக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.