பொய்... கை... பை...!: சட்டசபையில் திமுகவை விளாசிய முதல்வர் விஜய் : கண்ணதாசன், சர்க்காரியாவை குறிப்பிட்டு பேச்சு
சென்னை: சட்டசபையில் இன்று சட்டம் ஒழுங்கு மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது முதல்வர் விஜய் உரையாற்றும்போது, திமுக குறித்து கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளை குறிப்பிட்டு குற்றம்சாட்டி பேசினார்.
முதல்வர் விஜய் தொடர்ந்து பேசியதாவது: சில தினங்களுக்கு முன் உறுப்பினர் பேசும் போது, ஏதோ எலும்பு டாக்டர் மாதிரி சட்டசபைக்குள் எலும்பை உடைப்பாராம்; இது மாதிரியான பேச்சு எல்லாம் எதற்கு? இதுதான் அரசியலா? இப்படி எல்லாம் பேசி, பேசிதான் மக்கள் எல்லாம் அதை பார்த்து, பார்த்து தான் எல்லாம் அந்த சைடு உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
நான் ஒன்றும் அவர்களுக்கு அட்வைஸ் செய்ய வரவில்லை. இதுதான் ரியாலிட்டி. இன்னொரு திமுக மூத்த உறுப்பினர் பேசும் போது, மக்கள் அவர்கள் கட்சிகளுக்கு ஓட்டு போடாத காரணத்தினால், மக்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராதாம். எனக்கு சத்தியமாக புரியவில்லை; கடந்த 50 வருடமாக இதே மக்கள் தான் அவர்களுக்கு ஓட்டு போட்டு கொண்டு இருந்தார்கள்.
மக்களை பார்த்து எப்படி அந்த வார்த்தை வாயில் இருந்து வருகிறது என்று நினைத்து பார்க்கவே முடியவில்லை. மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் மனது எப்பொழுது இல்லையோ, இவர்கள் எல்லாம் ஏன் அரசியலில் இருக்க வேண்டும் என்ற கேள்வி தானே வரும். மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். ஆபாச நதி, வன்ம நதி பேச்சுகளை பல ஆண்டுகள் அரசியலில் இருக்கும் பெரியவர்கள் அந்த காலத்தில் பேசாத பேச்சா என்று கூறி நியாயப்படுத்துகின்றனர்.
அந்த கால அரசியலில் இருக்கும் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஏதுக்கு அவதூறாக, அசிங்கமான அரசியல், துருப்புடித்து போன அரசியல் நமக்கு ஏதுக்கு? நம்ம நண்பர்கள் எது பேசினாலும், நாங்கள் மிசாவை பார்த்தவர்கள் என்று சொல்கின்றனர். எல்லோருக்கும் மிசாவை பற்றிய வரலாறு தெரியும். நடந்தது, நடக்கிறது, நடக்க போவது எல்லாம் மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
திமுகவினர் குறித்து கண்ணதாசன் மிக சுருக்கமாக சொன்னார். 'பேசி பழகிய பொய், வாங்கி பழகிய கை, போட்டு பழகிய பை'', இது தான் திமுக. நமது அரசு யாருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளமாக இருக்காது. நமது அரசின் அடையாளம், தமிழ், தமிழர், தமிழ்நாடு அவ்வளவு தான். தமிழகம் தான் என் வீடு; 8 கோடி மக்கள் தான் என் சொந்தம். அவர்களின் அடையாளமாக தான் நமது அரசு எப்பொழுதும் இருக்கும்.
மக்கள் நலன், மக்கள் நலன் என்றே சொல்வார்; தன் மக்கள் நலன் ஒன்றே கருத்தில் கொள்வார் என்று எம்ஜிஆர் ஒரு பாட்டு ஒன்று பாடி இருக்கிறார். அதை மாற்றி கொஞ்சம் சொல்கிறேன். மக்கள் நலன், மக்கள் நலன் என்றே சொல்வோம். தமிழக மக்கள் நலன் ஒன்றே தான் கருத்தில் கொள்வோம். இப்படி நாம் இருக்கும் போது, அதனால் தான் நாங்கள் சொன்னோம். மக்கள் பணத்தில் இருந்து ஒரு பணத்தை கூட தொடமாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம். இவ்வாறு விஜய் பேசினார்.