பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல்.!! தவெக அரசுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்...
பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல்.!! தவெக அரசுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்...
சென்னை: தமிழக அரசு சார்பாக சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்வில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இன்றைய நிகழ்வில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாததற்கு இடமின்மை, பாதுகாப்பு போன்ற காரணங்கள் கூறப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் சமீபத்தில் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தேசிய கைத்தறி தின நிகழ்வு, அதற்கு முன்னர் நடைபெற்ற மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பெரம்பூர் தொகுதிக்கு முதலமைச்சர் சென்ற நிகழ்வு உட்பட எந்த நிகழ்வுகளுக்கும் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இது போன்ற சமீபத்திய பல அரசு நிகழ்வுகளிலும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாகும். நாங்கள் கொடுப்பதை மட்டும் செய்தியாக வெளியிட வேண்டும் என்று கூறுவது செய்திகளை அரசு தணிக்கை செய்வதற்கு சமமாகும் என தவெக அரசுக்கு, சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
மக்கள் வரிப்பணத்தில் அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல். அரசு நிகழ்வுகளில் மட்டுமல்லாமல் அரசு சார்ந்த எந்த நிகழ்வாக இருந்தாலும் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதை அரசோ அல்லது மற்றவர்களோ தடுக்க முடியாது, தடுக்கவும் கூடாது.
ஆகவே, அனைத்து அரசு நிகழ்வுகளிலும் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று தனது துறை அதிகாரிகளுக்கு செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட வேண்டும். அரசின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், அனைத்து அரசு நிகழ்வுகளுக்கும் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தி உள்ளது.