📅 Thursday, 06 August 2026 IST | ஆடி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 06, 2026 06:33 AM

பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்!

பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்!

நதி சுற்றுலா திட்டம்

* புதிய சட்டப்பூர்வ நிலையான சுற்றுலா வளர்ச்சி நிதி

* மாமல்லபுரத்தை உலகத்தர சுற்றுலா தலமாக மாற்ற, மத்திய அரசிடம் 200 கோடி ரூபாய் மானியம் கேட்பு

* காவிரி, வைகை, தாமிரபரணி ஆகிய மூன்று நதிகளிலும், 53 கோடி ரூபாயில் நதிச் சுற்றுலாத் திட்டங்கள்

* திருக்கடையூர், நாகூர், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில், 60 கோடி ரூபாயில், நவீன ஓய்வு இல்லங்கள்

* மூத்த குடிமக்களுக்கு 'ஏசி' பயணம், உணவு, தங்குமிட வசதியுடன், 20 கோடி ரூபாயில் கட்டணமில்லா ஆன்மிக பயணத் திட்டம்

* மாநில அளவில் உணவுக் கலைத் திருவிழா நடத்த, 20 கோடி ரூபாய்

* 'சூழல் சுற்றுலா இயக்கம்' என்ற திட்டம், 25 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்.

'கிரானைட் பாலிஷ்' மையங்கள்

* கனிமவள உற்பத்தி, நகர்வை, நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்க, கனிம மேலாண்மை அமைப்பு. விதிமீறல் குவாரிகளை கண்டுபிடிக்க, 3 கோடி ரூபாயில், மாவட்ட அளவில் விழிப்புணர்வு பணி மற்றும் அமலாக்கப்பிரிவுகள்

* புதுக்கோட்டை, பெரம்பலுார் மாவட்டங்களில், புதிதாக கிரானைட் பாலிஷிங் மையங்கள்.

வணிகம் செய்வதை எளிதாக்குவோம்

* நேர்மையாக வரி செலுத்துவோரை, மாநிலத்தின் வளர்ச்சியில் உண்மையான பங்களிப்பாளர்களாக கருதி, அவர்கள் வணிகம் செய்வதை மேலும் எளிதாக்க, சேவை சார்ந்த தொழில்நுட்பம்

* திட்டமிட்டு வரி ஏய்ப்பு செய்வோர் மீது மட்டுமே, உளவு தகவல்கள் அடிப்படையில் கடும் நடவடிக்கை.

காகிதமில்லா பத்திரப்பதிவு இலக்கு

* உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், பிற மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமுறைகள் அடிப்படையில், தேவையான சட்டத்திருத்தங்கள், விதிகள் இயக்கப்படும். மேலும், எங்கிருந்தும் பத்திரப்பதிவு என்பது இலக்கு

* முற்றிலும் காகிதமில்லா மற்றும் நேரடி வருகையில்லா பத்திரப்பதிவு முறை இலக்கு.

8 மாவட்டங்களில் 6,177 ஏக்கரில் சதுப்பு நிலக் காடுகள்

* கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய எட்டு மாவட்டங்களில், 6,177 ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நிலக் காடுகளை உருவாக்க, 40 கோடி ரூபாய்

* கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம், தேனி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், 100 கிராமங்களில் மனித - விலங்கு மோதலை தடுப்பதற்காக, 20 கோடி ரூபாயில் புதிய திட்டம்.

ஏ.ஐ., தொழில்நுட்ப கட்டட அனுமதி தளம்

* செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன், 'ஸ்பீட்' என்ற பெயரில், 40 கோடி ரூபாயில், இணையவழி, கட்டட அனுமதி தளம்

* ஏற்கனவே தொடங்கப்பட்ட, 24,131 வீடுகள் கட்டும் பணிகள் நடப்பு ஆண்டில் முடிக்கப்படும்; இந்த ஆண்டு புதிதாக, 1,253 கோடி ரூபாயில், 14,194 வீடுகள் கட்ட திட்டம்.

'தமிழ்நாடு வடிவமைப்பு நிறுவனம்'

* சர்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து, தொழில் முனைவோருக்கான, 'தொழில்நுட்ப ஜவுளி மாற்றத்திற்கான திட்டம்!'

* பனை விவசாயிகளுக்காக, 16 கோடி ரூபாயில், 'தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம்!'

* 'திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்' அமைக்க, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* வாகன மெக்கானிக்குகள், வாகன பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோர் போன்றோருக்கு, 3 கோடி ரூபாயில், மின்சார வாகனங்கள் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி

* ஐ.டி.ஐ., எனப்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், 10 கோடி ரூபாயில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழி கற்றல் என்ற புதிய பிரிவு. ஐந்து ஆண்டுகளில், 50 நிலையங்களில் அறிமுகம்

* புதிதாக ஐந்து தொழிற்பயிற்சி நிலையங்கள், 90 கோடி ரூபாயில் அமைக்க இலக்கு

* இந்த ஆண்டில், 12 லட்சம் கல்லுாரி மாணவர்களுக்கும், ஒரு லட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கும், தொழில் துறை தேவைக்கு ஏற்ப, 'வெற்றித் திறன் பயிற்சி!' முதல் கட்டமாக, 20,000 இளைஞர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்படும். இதற்காக 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* 'செயற்கை நுண்ணறிவு தொழில் வளர்ச்சி திட்டம்' உருவாக்கி, பாடத்திட்டங்களை வடிவமைக்க, நிபுணர் குழு

* செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், இணைய கருவிகள் குறித்த அறிவுக்கான, தமிழக பள்ளி திட்டம் விரிவாக்கம். இத்திட்டம், 5,000 அரசு பள்ளிகளில் இருந்து, கூடுதலாக, 2,600 பள்ளிகளிலும் உண்டு.

அறிவுசார் குறைபாடு உடையோருக்கு 'நம்பிக்கை இல்லம்'

* மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த நவீன உதவி உபகரணங்கள். விளையாட்டு செயற்கை கால், மின்தசை சமிக்ஞை வாயிலாக செயல்படும் மேல் கை செயற்கை அவயம், பிற உயர்தர உபகரணங்கள், 'கோக்ளியர் இம்ப்ளான்ட் பேட்டரி' வாங்க, அதன் விலையில், 50 சதவீதம் அதிகபட்சம், 30,000 ரூபாய் வழங்க இலக்கு

* தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம், கடலுார், விருதுநகர் மாவட்டங்களில், அறிவுசார் குறைபாடு உடையோருக்கு, 'நம்பிக்கை இல்லம்' என்ற அரசு நிறுவனம் அமைக்கப்படும். இங்கு, 3 வயது, அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி, ஆரம்பகால பயிற்சி சேவைகள், மறுவாழ்வு மற்றும் தொழிற்பயிற்சி

* தொடக்க நிலையில், ஒவ்வொரு நிறுவனமும், 50 மாணவர்கள் பயிலும் பகல் நேர பள்ளியாக தொடங்கப்பட்டு, தங்குமிட வசதியுடன், நிறுவனமாக மேம்படுத்தப்படும். இதற்காக, 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

3,000 கோவில்களில் திருப்பணி செய்ய முடிவு

* ஐந்து ஆண்டுகளில், 3,000 கோவில்களில் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு. 250 கோவில் குளங்கள் செப்பனிடல்; 75 மரத் தேர்கள் சீரமைத்தல்

* கோவில்களில், பாதுகாப்பான குடிநீர், கழிப்பறைகள், குளியலறைகள், தங்கும் விடுதிகள்

* ஆயிரம் ஆண்டுகள் பழமையான, 213 கோவில்கள், 418 கோடி ரூபாயில், புனரமைப்பு.

'நம்ம அரசு வாட்ஸாப்' வசதி 275 சேவைகளுக்கு விரிவாக்கம்

* அனைத்து 'இ - சேவை' மையங்களும், அதிவேக இணையதள இணைப்பு மற்றும் கூடுதல் மக்கள் நல சேவைகளுடன், 'இ - சேவை 2.0' மையங்களாக மேம்படுத்துதல்

* 'நம்ம அரசு - வாட்ஸாப் சாட்பாட்' வசதி, 275 மக்கள் நல சேவைகளை வழங்கும் வகையில் மேம்படுத்த இலக்கு.

* காவிரி - வைகை- குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு. பெண்ணையாறு - செய்யாறு, பெண்ணையாறு - பாலாறு, தாமிரபரணி - வைப்பாறு நதி இணைப்பிற்கு, திட்ட அறிக்கை தயார் செய்ய, 50 கோடி ரூபாய்

* காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற பெரு நதிகளில், திட, திரவ கழிவுகளை கையாளவும், சுத்திகரிப்பு நிலையம் அமைத்து பெரு நதிகளை துாய்மைப்படுத்தவும் ஆய்வு செய்ய, 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, தடுப்பணை கட்ட ஆய்வு செய்ய, 10 கோடி ரூபாய்; காவிரி டெல்டா பகுதிகளில் சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு குறித்து ஆய்வு செய்ய, 10 கோடி ரூபாய்

ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்

* 'தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள்' நடத்த, 42 கோடி ரூபாய்

* தமிழகம் முழுதும், 8 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் திறமையாளர்களுக்கு, உலகத்தரம் வாய்ந்த பயிற்சி அளிக்க, 5 கோடி ரூபாய்; தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் பதக்கங்கள் வென்று சாதிக்கும் 500 வீரர்களுக்கு, நிதியுதவி வழங்க, 22 கோடி ரூபாய்

* அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு கட்டாயமாக்கப்பட்டு, அதற்கான உபகரணங்கள் வைக்க முடிவு

* அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், சிறிய உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு வளாகங்கள்

* தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலையின் உள்கட்டமைப்பு, 2 கோடி ரூபாயில் மேம்பாடு.

ரூ.2,117 கோடி ஒதுக்கீட்டில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்

* தமிழகத்தில் உள்ள நகரங்களின் உட்கட்டமைப்பு, குடிநீர் வழங்கல், கழிவுநீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை, நகரச் சாலைகள், பசுமைப் பரப்பு விரிவாக்கம், நீர்நிலைகள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை, ஒரே கூரையின் கீழ் இணைக்க, 'முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்' உருவாக்கம். ஓராண்டுக்கு, 2,117 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

பாக்கெட்டில் கோதுமை மாவு

* முதியோர், மாற்றுத்திறனாளிகள், விளிம்புநிலை சமூகத்தினரின் வீடுகளுக்கே சென்று, அத்தியாவசியப் பொருட்களை, முன்னுரிமை அடிப்படையில் வழங்கும், பொது வினியோக திட்டத்தை விரிவுபடுத்த, 7.18 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை

* தமிழக மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 225 கோடி ரூபாய், மூலதன மானியங்கள் திட்டத்தின் கீழ், 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* 'பசுமை எக்கு உற்பத்தி முன்முயற்சி'க்காக, இந்தாண்டு, 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதார பாதுகாப்பு திட்டம்

* கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள, தமிழரின் பாரம்பரிய பண்பாட்டு தலங்களை, தரம் உயர்த்தும் வகையிலான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்

* நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 200 கலைக்குழுக்களுக்கு, 100 நாட்கள் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு

* கீழடி, ஆதிச்சநல்லுார், கொடுமணல், மயிலாடும்பாறை, சிவகளை, அழகன்குளம், அரிக்கமேடு, சாளுவன்குப்பம், காவேரிபூம்பட்டினம் உள்ளிட்ட தொல்லியல் தலங்களை பாதுகாக்க, கல்வி சுற்றுலா.