📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 15, 2026 05:33 PM

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: அன்பில் மகேஷ் கேள்விகள்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: அன்பில் மகேஷ் கேள்விகள்

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மீனவ மக்கள் அவசரக் கூட்டம் கூட்டியுள்ளனர்.

இந்நிலையில், அத்திட்டம் குறித்து திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சுனாமி பேரலைகளால் பாதிக்கப்பட்ட, அடுத்த 40 ஆண்டுகளில் கடல்நீர் சூழும் அபாயம் கொண்ட இடமாக வல்லுநர்களால் சுட்டிக்காட்டப்படும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது எந்த வகையில் நியாயம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின்கீழ் வரும் இப்பகுதியில் இவ்வளவு பெரிய கட்டடத்தை எழுப்புவது ஆபத்தானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அப்பகுதியில் இயங்கும் பல்வேறு பள்ளிகளில் பயிலும் 30,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் பாதுகாப்பு, அவர்களின் போக்குவரத்துக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து அரசு சிந்திக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீனவர்களின் பூர்வீக நிலமான அங்கு, அவர்களின் படகுகளை நிறுத்தவும் மீன்களை உலர்த்தவும் எவ்விதத் தடையும் வராது என்பதை அரசு உறுதிப்படுத்துமா என்ற சந்தேகத்தையும் அன்பில் மகேஸ் எழுப்பியுள்ளார்.

ஏற்கெனவே கோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட ஓமந்தூரார் அரசுக் கட்டடத்தின் பெரும்பகுதி பயன்படுத்தப்படாமல் இருக்கும்போது, நிதி நெருக்கடிக்கு மத்தியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தேவையற்றது எனக் கூறியுள்ள அவர், ஓமந்தூரார் வளாகத்தையே தலைமைச் செயலகமாகப் பயன்படுத்தலாம் அல்லது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத மாற்று இடத்தை அரசு தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.