"பும்ராவுக்கு என்ன வயசாகுது? இன்னும் சின்னப்பையன் தான்".. ஜாம்பவான் மெக்ராத் சொன்ன முக்கிய அறிவுரை
"பும்ராவுக்கு என்ன வயசாகுது? இன்னும் சின்னப்பையன் தான்".. ஜாம்பவான் மெக்ராத் சொன்ன முக்கிய அறிவுரை
சென்னை: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் காயம், உடற்தகுதி குறித்துப் பேசிய ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத், பும்ரா இன்னும் ஒரு "இளம் வயது வீரர்" தான் என்றும், அவர் அதிக காலம் கிரிக்கெட் ஆட வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு வகை கிரிக்கெட் ஆடுவதை நிறுத்த வேண்டும் எனவும் ஆலோசனை கூறி இருக்கிறார்.
சென்னையில் உள்ள எம்.ஆர்.எஃப் வேகப்பந்து வீச்சு அகாடமியின் நிகழ்ச்சியில் திங்கட்கிழமை (ஜூலை 27) பேசிய மெக்ராத், "பும்ராவுக்கு இப்போது என்ன வயது இருக்கும்? 31 அல்லது 32 தான். அவர் இன்னும் ஒரு இளம் வயது வீரர் (Spring Chicken) தான். எனவே அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிப்பதற்கான வழியைக் கண்டறிய வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக அவருக்கு சில காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அவர் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விரும்புகிறாரா அல்லது டி20 போட்டிகளில் மட்டும் விளையாட விரும்புகிறாரா என்பதை அவரது உடலமைப்பைப் பொறுத்து அவரே தான் முடிவு செய்ய வேண்டும். பும்ரா போன்று கைகளை விசித்திரமாக நீட்டி வீசும் பந்துவீச்சாளர்களுக்கு மூட்டுகளில் அதிக அழுத்தம் ஏற்படும்" என்றார்.
கடந்த 2024-25 பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடருக்குப் பின் முதுகுவலி காயத்தால் பாதிக்கப்பட்ட பும்ராவின் பணிச்சுமையை பிசிசிஐ மிகக் கவனமாகக் கையாண்டு வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா தற்போது கண்காணிப்பில் இருக்கிறார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா இடம் பெற்று இருந்தாலும் அவர் போட்டிகளில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது .
இந்த நிலையில் அனுபவ பந்துவீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் பும்ராவின் இடத்தை நிரப்பக்கூடிய அடுத்த தலைமுறை இந்திய பந்துவீச்சாளராக பிரசித் கிருஷ்ணாவை மெக்ராத் தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் பிரசித் கிருஷ்ணாவின் மிகப்பெரிய ரசிகன். எம்.ஆர்.எஃப் அகாடமியில் இருந்து ஐபிஎல் வரை அவரது வளர்ச்சி அசாத்தியமானது. அவரது உயரம், வேகம் மற்றும் பந்தை பவுன்ஸ் செய்யும் விதம் ஆகியவை இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்" என்று கூறினார்.