📅 Saturday, 22 August 2026 IST | ஆவணி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion August 22, 2026 11:01 AM

புனித நாளை அவமதித்த சுற்றுலாப் பயணிக்கு பாலியில் சிறைத்தண்டனை

புனித நாளை அவமதித்த சுற்றுலாப் பயணிக்கு பாலியில் சிறைத்தண்டனை

பாலி: இந்தோனீசியாவின் பாலித்தீவில் இந்து சமயத்தின் புனிதமான மௌன நாளை அவமதித்த சுவிட்சர்லாந்துச் சுற்றுப்பயணிக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லூசியன் ஆண்ட்ரின் ஸக்ராகன் என்ற அந்த 26 வயது ஆடவர், மௌன நாளன்று ஆள்நடமாட்டமில்லாத கடற்கரையில் நடந்து சென்று காணொளி எடுத்தார். அதனைத் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தவறான சொற்களுடன் பதிவிட்டார். இந்தச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே கடுங்கோபத்தை ஏற்படுத்தியது.

பாலியில் மௌன நாளின்போது மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும்; அமைதி காக்க வேண்டும். அன்றைய நாளில் விமான நிலையச் சேவைகள் முடக்கப்படும்; இணையச் சேவையும் கேளிக்கை நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்படும். மின்சாரத்தைப் பயன்படுத்துவதும் ஊக்குவிக்கப்படுவதில்லை.

இந்த விதிகளும் கட்டுப்பாடுகளும் சுற்றுப்பயணிகளுக்கும் பொருந்தும்.

இவ்வாண்டு மார்ச் 19ஆம் தேதி அங்கு மௌன நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

நீதிமன்ற விசாரணையின்போது, பாலி மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக ஸக்ராகன் மன்னிப்பு கேட்டார். இருப்பினும், பொதுமக்களின் சமய உணர்வை வெளிப்படையாக அவமதித்ததால் அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அண்மைக்காலமாக பாலித்தீவிற்குச் சுற்றுப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதேவேளையில், அவர்களின் ஒழுங்கீன நடத்தைகளும் அதிகரித்துள்ளன. இதனால், விதியை மீறும் வெளிநாட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பாலி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.