📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 06, 2026 06:01 PM

புதிய வரித் தளர்வுத் திட்டங்களுக்காக கிட்டத்தட்ட $1.5 பில்லியன் செலவாகும்: ஜெஃப்ரி, சிங்க‌ப்பூர் செய்திகள்

புதிய வரித் தளர்வுத் திட்டங்களுக்காக கிட்டத்தட்ட $1.5 பில்லியன் செலவாகும்: ஜெஃப்ரி, சிங்க‌ப்பூர் செய்திகள்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய வரித் தளர்வுத் திட்டங்களுக்காகக் கிட்டத்தட்ட $1.5 பில்லியன் செலவாகும் என இரண்டாம் நிதி அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) இடம்பெற்ற மசோதா மீதான விவாதத்தை முடித்துவைத்து உரையாற்றிய அவர், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான நிறுவன வருமான வரித் தள்ளுபடி, ரொக்க மானியம் குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். மத்திய கிழக்கு நிலவரத்தால் ஏற்பட்டுள்ள குறுகிய காலச் செலவின அழுத்தங்களைச் சமாளிக்கும் வகையில், அனைத்து நிறுவனங்களுக்கும் உடனடி, பரவலான ஆதரவை வழங்கவே இந்த வரித் தள்ளுபடிகளும் ரொக்க மானியங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன என்று திரு சியாவ் விளக்கமளித்தார். மேலும், நிறுவனம் சார்ந்த கண்டுபிடிப்புத் திட்டத்தின்கீழ் ஏஐ செலவினக் கோரிக்கைகளுக்கு முன்அனுமதி தேவையின்றி விரிவான தளர்வுகளை அரசாங்கம் அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம், $2,000 ரொக்க மானியம் போதுமானதா எனக் கேள்வி எழுப்பியதுடன், குடும்பங்களுக்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டுத் திட்டங்கள் ஒருவிதமான சார்ந்திருக்கும் கலாசாரத்தை உருவாக்கிவிடும் என்றும், வரிக் குறைப்பு சார்ந்த கட்டமைப்பு மாற்றங்களே சிறந்தது என்றும் சுட்டிக்காட்டினார். மக்கள் செயல் கட்சி உறுப்பினர் ஷான் லோ, அதிக விலைமதிப்புள்ள 1 விழுக்காடு சொத்துகளுக்குப் பரம்பரைச் சொத்து வரி விதிக்கலாம் எனப் பரிந்துரைத்தார். சந்ததி கடந்து தொடரும் செல்வ ஏற்றத்தாழ்வைக் குறைக்கவும், தேசிய வெற்றியில் உருவான சொத்து மதிப்பைச் சமூகத்துடன் பகிர்ந்துகொள்ளவும் இது உதவும் என அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பல பரிந்துரைகளை எதிர்கால வரி முறைமை மதிப்பாய்வின்போது பரிசீலிப்பதாக உறுதியளித்த அமைச்சர் சியாவ், உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப சிங்கப்பூரின் வரி முறையைப் புதுப்பித்துப் போட்டியாற்றலைத் தக்கவைப்பதே இதன் நோக்கம் என்றார். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறியது.