📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 10, 2026 08:05 PM

புதுச்சேரி பாஜக நிகழ்வில் துணைநிலை ஆளுநர் பங்கேற்றது ஏன்?

புதுச்சேரி பாஜக நிகழ்வில் துணைநிலை ஆளுநர் பங்கேற்றது ஏன்?

புதுச்சேரி: ‘பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பாஜக ஏஜெண்டாக செயல்படுவது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் விளக்கம் தரவேண்டும்’ என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வந்திருந்தார். குடியரசுத் தலைவரின் வண்ண விருதை காவல் துறைக்கு வழங்கினார். அமித் ஷா பங்கேற்ற காவல் துறை வண்ண விருது வழங்கும் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. முதல்வர் ஏன் வாய் மூடி மவுனமாக இருக்கிறார். இது தமிழ்த்தாய்க்கு செய்த அநீதி. இதற்கு உள்துறை அமைச்சர், முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்.

விழாவுக்கு பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக நடத்திய தேசியக்கொடி பேரணியை தொடக்கி வைத்தார். இது முழுக்க முழுக்க புதுச்சேரி பாஜகவின் விழாவாக இருந்தது. அதில் அதிகாரிகள், முதல்வர் கலந்து கொள்ளவில்லை. பாஜகவானது கொடி யாத்திரையை நடத்தியது. இதில் மிகப் பெரிய ஆச்சரிய அதிர்ச்சியாக மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் விழா மேடையில் இருந்தார்.

பாஜகவின் நிகழ்வில் பாஜக சார்பில் அமித் ஷா, நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால் அங்கு துணை நிலை ஆளுநருக்கு என்ன வேலை? ஆளுநர் நடுநிலையானவர், எக்கட்சிக்கும் ஆதரவு இல்லாதவர். பாஜக விழா மேடையில் ஆளுநர் இருந்தது அதிர்ச்சியாக இருந்தது. துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் புதுச்சேரியின் ஆளுநர் மாளிகையானது பாஜகவின் தலைமை அலுவலகமாகிவிட்டது.

பாஜகவினர் மட்டுமே அவரை சந்திக்க முடியும். மற்ற கட்சிக்காரர்கள் சந்திக்க நேரம் கிடையாது. துணை நிலை ஆளுநர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. நிர்வாகம் தெரிந்தவர். விதிமுறை தெரியும். எந்தநெந்த நிகழ்வில் ஆளுநர் கலந்து கொள்ள வேண்டும் என்பதும் தெரியும். ஆனால், பாஜக நிகழ்வில் ஆளுநர் கலந்துகொண்டது கண்டனத்துக்குரியது. அதை ஏற்க முடியாது. அவர் வகிக்கும் பதவிக்கு கைலாஷ்நாதன் இழுக்கு ஏற்படுத்தியுள்ளார்.

இதன்மூலம் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பாஜக ஏஜெண்டாக செயல்படுவது உறுதியாகியுள்ளது. பாஜக விழாவில் துணைநிலை ஆளுநர் பங்கேற்றது தொடர்பாக விளக்கம் தரவேண்டும். துணைநிலை ஆளுநர் செயல்பாடு மக்கள் மத்தியில் மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பதாக இருந்தால் பதவிக்கு பெருமை சேர்க்க வேண்டுமென்றால், விழாவில் பங்கேற்றதற்கு குறைந்தப்பட்சம் வருத்தம் தெரிவிக்கவேண்டும். இல்லையென்றால் அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்” என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.