பயிர்க்கடன் முழு தள்ளுபடி வேண்டும் பல்லடத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பல்லடம்: தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி, பல்லடத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.
மாநிலத் தலைவர் சண்முகம் பேசுகையில், சிறு விவசாயிகளுக்கு முழுமையாகவும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதமும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்தார். ஆனால், தற்போது சினிமா பாணியில் 5 ஆயிரம், 10 ஆயிரம் என அறிவித்து ஏமாற்றி வருகிறார்.
இந்த 'ஆடித்தள்ளுபடி' எங்களுக்கு வேண்டாம். நிதி இல்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது; அப்படியெனில் தமிழகத்தின் கடன் நிலவரம் தெரியாமலா வாக்குறுதி அளித்தார்? வரும் ஜூலை 5-ம் தேதிக்குள் தேர்தல் வாக்குறுதிப்படி முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவிக்க வேண்டும். இல்லையெனில், ஒட்டுமொத்த விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்துத் தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
முன்னதாக, முதல்வருக்கு நல்ல புத்தியைக் கொடு என வேண்டி விவசாயிகள் தேங்காய் உடைத்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.