பழனி கோயில் நில மோசடி வழக்கில் சார்
பழனி கோயில் நில மோசடி வழக்கில் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாஷ் ஜாமின் மனு தள்ளுபடி
திண்டுக்கல்: பழனி கோயில் நில மோசடி வழக்கில் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாஷ் ஜாமின் மனுக்களை திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழனி கோயிலின் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அறக்கட்டளை நிறுவனர் முருகதாஸ், நிலம் வாங்கிய திருப்பூரை சேர்ந்த வெள்ளத்துரை, பழனியை சேர்ந்த சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்மதீன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் முதல் கட்டமாக கைது செய்தனர்.
பின்னர், கடந்த 6ஆம் தேதி கொடைக்கானலில் வைத்து சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். நில மோசடிக்கு மூல காரணமாக செயல்பட இடைத்தரகர் ஜெயபிரகாஷ் கடந்த 7 ஆம் தேதி திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நீதிபதி நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டு ஜஸ்டின் மணிகண்டனை வருகின்ற 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் இடைத்தரகர் ஜெயபிரகாஷ் ஆகியோர் கடந்த 10ஆம் தேதி தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என திண்டுக்கல் மாஜிஸ்திரேட் முதலாவது நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இன்று விசாரணைக்கு வந்த இந்த மனு நீதிபதி பாக்கியராஜ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதே வழக்கில் ஜாமீன் மனுதாக்கல் செய்திருந்த முருகதாஸ், சேதுபதி, வெள்ளத்துரை ஆகியோரின் மனுக்கள் கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.