📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 13, 2026 04:03 AM

பழனி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம்

பழனி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம்

பழனி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் - உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

பழனி நில விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்த வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Published : August 12, 2026 at 5:51 PM IST

மதுரை: பழனி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு மீது பதிலளிக்க பழனி தண்டாயுதபாணி கோயில் தரப்புக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார், பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி பிரதீப் ஆகியோர் மதுரை அமர்வில், இந்த விவகாரம் தொடர்பாக தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதில், "பழனி அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 1.35 ஏக்கர் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை அமர்வை அணுகி, மடத்தை எதிர்மனுதாரராக சேர்க்காமல் உண்மை விபரங்களைத் மறைத்து உத்தரவு பெற்று முருகதாஸ் என்பவர் வெள்ளைத்துரை மற்றும் சேதுபதி பெயரில், பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் வழக்கமான பதிவாளர், அலுவலக உதவியாளர், மாவட்ட பதிவாளர், கூடுதல் பொறுப்பு வைத்து ஆவண எண் ஒதுக்கிய பதிவாளர் என அனைத்து அதிகாரிகள் மீதும் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரிக்க போதுமான முகாந்திரம் உள்ளது. எனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க இடைக்கால தடை விதிப்பதோடு, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, பாதுகாக்கவும், வழக்கை சிபிஐக்கு மாற்றியும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்த வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டும்" என வாதிட்டார்

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் தான் வழக்கு விசாரணை நடைபெற்று, கைது நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. மேலும் இதற்கான சதி திட்டம் கடந்த மார்ச் மாதமே தொடங்கியது" என வாதிட்டார்.

இதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், பழனி தண்டாயுதபாணி கோவில் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.