📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 28, 2026 03:33 AM

பழநி மடம் நில மோசடி வழக்கு; சஸ்பெண்ட் சார் பதிவாளரிடம் ஏழு மணி நேரம் விசாரணை

பழநி மடம் நில மோசடி வழக்கு; சஸ்பெண்ட் சார் பதிவாளரிடம் ஏழு மணி நேரம் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக புகாருக்குள்ளான சஸ்பெண்ட் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சி.பி.சி.ஐ.டி.,யினர் நேற்று ஏழு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது.

பழநி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் நீதிமன்றம் உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் தனியாருக்கு ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்த புகாரில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளையை சேர்ந்த முருகதாஸ், திருப்பூர் மாவட்டம் உடுமலை பாப்பன்குளம் வெள்ளத்துரை, பழநி சேதுபதி, கோயில் நிர்வாக அதிகாரிகள், வருவாய்த்துறையினர், பதிவுத்துறையினரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர்.

மடத்துக்கு சொந்தமான இடத்தின் பல்வேறு காலகட்ட நில வகைப்பாடு தொடர்பான ஆதாரங்கள், ஆவணங்களை வருவாய்த்துறையினர் மூலம் பெற்ற சி.பி.சி.ஐ.டி., போலீசார் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தபோது மின், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றனர்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் நிலம் கைமாறியபோது சாட்சி கையெழுத்து போட்டவர்களிடம் விசாரணை நடத்தி சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டது.

ஜஸ்டின் மணிகண்டனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை முன் ஜாமின் வழங்கியது. இந்நிலையில் விசாரணைக்காக நேற்று திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டன் வழக்கறிஞருடன் ஆஜரானார். அவரிடம் டி.எஸ்.பி., அஜய்தங்கம் விசாரணை நடத்தினார். நேற்று காலை 10:30 மணிக்கு துவங்கிய விசாரணை மாலை 5:30 மணிக்கு முடிந்தது. புகார் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு அவரிடம் பதில்களை சி.பி.சி.ஐ.டி.,யினர் பெற்றனர்.