ராஜீவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு 20
ராஜீவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 20-ந்தேதி தமிழ்நாடு காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் பாரத ரத்னா ராஜீவ்காந்தியின் 82-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்துவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை உருவாக்கி, லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுகிற சூழலை ஏற்படுத்தி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர் ராஜீவ்காந்தி. அவர் பிரதமராக இருந்த காலத்தில் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கத்தில், தேர்தலில் வாக்களிக்கும் வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தை நிறைவேற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நிலையாக நடப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியவர். தேசிய கல்விக் கொள்கையை வகுத்தவர். நாடு முழுவதும் கிராமப்புறங்களில் நவோதயா பள்ளிகளை தொடங்கியவர். அசாம், பஞ்சாப் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு கண்டவர்.
நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு அடுத்த நிலையில், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுகிற பஞ்சாயத்துராஜ், நகர்பாலிகா அமைப்புகளை அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் உருவாக்கி, மக்களுக்கே அதிகாரம் என்ற கோட்பாட்டை உருவாக்கியவர். இதன் மூலம் அதிகாரத்தை பரவலாக்கி மக்கள் பங்கேற்கிற ஜனநாயகத்தை உருவாக்கிய பெருமை திரு. ராஜீவ்காந்தி அவர்களுக்கு உண்டு. தமிழக மக்களை அதிகமாக நேசித்த அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடுகிற நோக்கத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நடத்த திட்டமிட்டுள்ள இக்கூட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர் அவசியம் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் குலாம் அகமது மிர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா, அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் டாக்டர் ஏ. செல்லக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, சு. திருநாவுக்கரசர், கே.எஸ். அழகிரி, எம். கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான எஸ். ராஜேஷ்குமார், உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், இந்நாள் - முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாக பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு அரசியலில் ராஜீவ்காந்தி கண்ட கனவை நினைவாக்கும் வகையில் எதிர்கால செயல் திட்டங்களை வகுத்து காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துகிற வகையில் பல்வேறு கருத்துகளை விவாதிப்பதற்காக இக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெறுகிற வகையில் அனைவரும் தவறாமல் பங்கேற்று ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.