📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 10, 2026 05:03 PM

ராகுல் காந்தி இந்தியாவை விட்டு வெளியேறினாலே நாட்டுக்கு அச்சுறுத்தல் இருக்காது

ராகுல் காந்தி இந்தியாவை விட்டு வெளியேறினாலே நாட்டுக்கு அச்சுறுத்தல் இருக்காது

ராகுல் காந்தி இந்தியாவை விட்டு வெளியேறினாலே நாட்டுக்கு அச்சுறுத்தல் இருக்காது - நயினார் நாகேந்திரன்

முதலமைச்சர் விஜய் மக்கள் மத்தியில் நடிக்கிறார். ஆனால், ராகுல் காந்திக்கு நடிக்க கூட தெரியவில்லை என நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.

Published : October 10, 2026 at 4:30 PM IST

கோயம்புத்தூர்: ராகுல் காந்தி இந்தியாவை விட்டு வெளியேறினாலே இந்த நாட்டிற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இருக்காது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். 1989-ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அந்தக் கட்சியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருகின்றன. தற்போதும் அதேமுறையில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது” என்றார்.

அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றது தொடர்பான கேள்விக்கு, ”இந்த இடைத்தேர்தலை ஆரோக்கியமான ஜனநாயகமாக கருத முடியாது. இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக் கூடாது என்பதே எனது கருத்து. நியாயமாக சிந்திக்கும் அனைவரின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கும்.

குதிரை பேரம் நடைபெற்றதால் தான் இந்த தேர்தல் வந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களின் சுயநலத்திற்காக மீண்டும் ஒரு தேர்தல் நடத்தப்பட்டதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இனிமேலாவது மக்களின் பிரச்சினைகளை கவனிக்க வேண்டுமே தவிர, சுயநலத்துடன் செயல்படக்கூடாது” என்றார்.

அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது குறித்த கேள்விக்கு, “இரண்டாவது இடம், மூன்றாவது இடம் என்பதையெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. வெற்றி, தோல்விகளை மட்டுமே பார்க்கிறோம். எந்தக் காரணமும் இல்லாமல் நடைபெற்ற தேர்தல் இந்த இடைத்தேர்தல்” எனத் தெரிவித்தார்.

அதிமுக, பாஜகவின் கிளையாகச் செயல்பட்டதால் தான் தோல்வியடைந்தது என்று அமைச்சர் வன்னி அரசு கூறியது குறித்த கேள்விக்கு, “ஆடு நனையுதே என்று ஓநாய் அழுததாம். இவர்கள் எல்லாம் நேற்று அரசியலுக்கு வந்தவர்கள். ஏன் திமுகவும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்துள்ளது. இந்த வரலாறுகள் தெரியாமல் சிலர் பேசுகிறார்கள்.

கடந்த பொதுத் தேர்தலில் விஜய் ஐந்து தொகுதிகளுக்கு மட்டுமே பிரசாரம் மேற்கொண்டார். தற்போது ஒரு தொகுதியில் மட்டும் 39 இடங்களில் இறங்கி, வீதி வீதியாகச் சென்று பிரசாரம் செய்துள்ளார். வாக்குகளுக்குப் பணம் கொடுத்துள்ளனர். எனவே இந்த இடைத்தேர்தலை மட்டும் வைத்து வாக்கு சதவீதத்தைக் கணக்கிட முடியாது.

ஆளும் கட்சியாக பொறுப்பேற்ற பிறகு தவெகவிற்கான மக்களின் ஆதரவு சரிந்துள்ளது. இல்லையென்றால் 30 முதல் 40 இடங்களுக்குச் சென்று பிரசாரம் செய்ய வேண்டிய தேவை என்ன? இனிவரும் காலங்களில் அவர்களின் செல்வாக்கு மேலும் சரியும்.

கடந்த 4 மாத தவெக ஆட்சியில் மின்வெட்டு, குடிநீர்ப் பற்றாக்குறை, கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் இல்லாமை உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கிறது. மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதால், எதிர்காலத்தில் தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலைக்குச் செல்லும்” என எச்சரித்தார்.

SIR விவகாரத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜிநாமா செய்ய வேண்டுமென நடக்கும் போராட்டம் குறித்த கேள்விக்கு, “SIR குறித்து மீண்டும் மீண்டும் விளக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 12 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதில் மாற்றுக்கருத்து இல்லை. அதில், இரண்டு கோடி பேர் உயிரிழந்தவர்கள்.

உயிரிழந்தவர்கள் சொர்க்கத்திலும், நரகத்திலும் இருக்கிறார்கள். ஆனால், ராகுல் காந்தி அவர்களையெல்லாம் அழைத்து வந்து வாக்களிக்க வைக்க வேண்டும் என்று கூறுகிறார். ராகுல் காந்தியையே அங்கு அனுப்பி, உயிரிழந்தவர்களையெல்லாம் அழைத்து வரச் சொல்ல வேண்டும்” என்று கிண்டலாக கூறினார்.

ராகுல் காந்தி- முதலமைச்சர் விஜய் சந்திப்பு குறித்த கேள்விக்கு, “இது முதலமைச்சருக்கு நேர விரயம் தான். முதலமைச்சர் மக்கள் மத்தியில் நடிக்கிறார். ராகுல் காந்திக்கு நடிக்க கூடத் தெரியவில்லை. தடுப்பு வேலிகள் மீது ஏறி, சங்கிலியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார். ராகுல் காந்தி இந்தியாவை விட்டு வெளியேறினாலே இந்தியாவுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இருக்காது. இத்தாலிக்குச் சென்று குடியேறட்டும்” என விமர்சித்தார்.